சுடச்சுட

  

  பாலாறு: தமிழக உரிமை நிலைநாட்டப்படும்: பேரவையில் முதல்வர் உறுதி

  By DIN  |   Published on : 13th February 2019 04:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  eps3


  பாலாறு நதிநீர் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட அனைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுத்து வருவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
  சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டும் விவகாரத்தை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எழுப்பின. அப்போது நடந்த விவாதம்:-
  நந்தகுமார் (திமுக):
  பாலாற்றின் குறுக்கே ஆந்திரம் தடுப்பணைகள் கட்டுவதால் தமிழகத்தைச் சேர்ந்த 5 மாவட்டங்களின் ஒன்றரை கோடி மக்களது குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும். பாலாற்றின் குறுக்கே 500 மீட்டருக்கு ஒரு தடுப்பணை என்ற அளவில் 30 தடுப்பணைகளை கட்ட ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்தத் தடுப்பணைகள் கட்டுவதைத் தடுத்து நிறுத்திட வேண்டும். மேலும், பாலாறு பாயும் நமது மாநிலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 5 கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணைகளை நமது அரசே கட்ட வேண்டும். இதன்மூலம் நீர்வளத்தை பெருக்கிட நடவடிக்கை எடுக்கலாம்.
  ஜே.ஜி.பிரின்ஸ் (காங்கிரஸ்): மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டும் நடவடிக்கையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.
  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி:  மதராஸ்-மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும். இந்த ஒப்பந்தத்தின்படி, மேற்பகுதியிலுள்ள மாநிலங்கள் கீழ்ப் பகுதியிலுள்ள மாநிலங்களின் முன்
  அனுமதி இல்லாமல், எந்த அணை கட்டுமானத்தையோ அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானத்தையோ, நீரைத் திருப்புவதற்கும், நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்தவொரு செயலையும் மேற்கொள்ள முடியாது.
  பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைகளின் பழுதுபார்ப்பு மற்றும் மறுகட்டமைப்புக்காக ஆந்திர அரசு ரூ.41.75 கோடியை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டதாகச் செய்திகள்  வெளியாகின. இதைத் தொடர்ந்து, தடுப்பணைகளுக்கான விவரங்களை தமிழகத்துக்கு அனுப்ப வேண்டுமெனவும், நமது மாநிலம் கருத்துகளை அளிக்கும் வரையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
  ஆந்திர அரசிடம் இருந்தோ, மத்திய அரசிடம் இருந்தோ பதில் ஏதும் வராத நிலையில், பாலாற்றின் குறுக்கேயுள்ள 21 தடுப்பணைகளின் பழுதுபார்ப்பு, மறுகட்டமைப்புப் பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த நவம்பர் 19-இல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, பாலாற்றின் குறுக்கே மேலும் 30 புதிய தடுப்பணைகளை கட்ட ஆந்திர அரசு முடிவு செய்திருப்பதாக கடந்த 5-ஆம் தேதி செய்திகள் வெளியாகின. இந்தப் பிரச்னை குறித்து ஆந்திர அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
  பாலாறு நதிநீர் பிரச்னையில் தமிழக அரசு மிக உன்னிப்புடனும், கவனத்துடனும் சட்டரீதியாகப் பிரச்னையை தொடர்ந்து அணுகி வருகிறது. 
  தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்கு தமிழக அரசு அனைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார் முதல்வர் பழனிசாமி.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai