சுடச்சுட

  

  பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி பிப். 28-இல் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 13th February 2019 02:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி, பிப். 28-இல் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் கே.ஏ.செங்கோட்டுவேல் தெரிவித்துள்ளார்.
  கடந்த நான்கு ஆண்டுகளாக பல முறை கோரிக்கை விடுத்தும், பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி தராத தமிழக அரசைக் கண்டித்து,  தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.ஏ.செங்கோட்டுவேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,  சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் பங்கேற்று தமிழக அரசின் அலட்சியப்போக்கை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். 
  கடந்த நான்கு ஆண்டுகளில், பால் உற்பத்திக்கான தீவனங்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தாததைக் கண்டித்தும், தீவனங்களை மானிய விலையில் வழங்கிட வேண்டும், சத்துணவில் பாலை உணவுப் பொருளாகச் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
  இதைத் தொடர்ந்து,  சங்கத்தின் தலைவர் கே.ஏ.செங்கோட்டுவேல் செய்தியாளர்களிடம் கூறியது:
  கடந்த நான்கு ஆண்டுகளாக பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி, தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
  பால் கொள்முதல் விலை உயர்வு பெற்று நான்கரை ஆண்டுகள் ஆகின்றன. கறவை மாடுகளுக்கு வேண்டிய தீவன மூலப் பொருள்களின் விலை 35 சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நாளொன்றுக்கு 2 கோடி லிட்டருக்கு மேலாக பால் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு லிட்டருக்கு ரூ.44 வரை உற்பத்திச் செலவு செய்து, லிட்டருக்கு ரூ.18 முதல் ரூ.28 வரை பால் விற்பனை செய்ய நேரிடுகிறது. 
  எனவே, பால் கொள்முதல் விலை பசும் பாலுக்கு ரூ.27-இல் இருந்து ரூ.37-ஆகவும், எருமை பாலுக்கு ரூ.29-இல் இருந்து ரூ.45-ஆகவும் உயர்த்த தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.  ஆனால், இது குறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவரது சொந்த மாவட்டத்தில் முதல்கட்டமாக இந்தப் போராட்டத்தை நடத்தி உள்ளோம். 
  இதைத் தொடர்ந்து, வரும் பிப். 28-ஆம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில், இதே போன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம். அதன் பின்னரும் அரசு தங்களது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால்,  வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கும் பாலை நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai