சுடச்சுட

  

  வசமாகச் சிக்கிக் கொண்டிருப்பது யார்? பேரவையில் நடந்த ருசிகர விவாதம் 

  By DIN  |   Published on : 13th February 2019 08:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  assembly-6


  சென்னை: மத்திய அரசிடம் சிக்கிக் கொண்டிருக்கும் தமிழக அரசு என்று காங்கிரஸ் எம்எல்ஏ ராமசாமி பேசிய பேச்சால், காரசார விவாதம் எழுந்தது.

  தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று காலை கூடியதும், பல்வேறு அலுவல் பணிகள் நடந்தன.

  அப்போது, மத்திய அரசிடம் தமிழக அரசு சிக்கிக் கொண்டிருப்பதாகக்  காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் ராமசாமி குற்றச்சாட்டை முன் வைத்தார்.

  "யாரிடம் யார் சிக்கிக் கொண்டது? மத்திய அரசிடம் தமிழக அரசு சிக்கவில்லை. தமிழகத்துக்குத் தேவையான நிதியை, மத்திய அரசிடம் போராடி பெற்று வருகிறோம். மத்திய நிதியமைச்சராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்தான் வசமாக சிக்கியுள்ளார். நாங்கள் யாரிடமும் சிக்கவில்லை என்று மத்திய அரசிடம் தமிழக அரசு சிக்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு முதல்வர் பழனிசாமி பதில் அளித்தார்.

  இதற்கு பதில் அளித்த ராமசாமி, நீங்கள் குறிப்பிடும் நபரே இன்னும் 5 மாதத்தில் நிதியமைச்சராக பதவியேற்க உள்ளார் என்றார்.

  அப்போது, குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் வீடு, தலைமைச் செயலத்தில நடந்த சோதனைகள் எல்லாம் மிரட்டல் இல்லையா? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

  அண்ணா கொடுத்த அடியில் இருந்து மீள முடியாமல் தவிப்பது காங்கிரஸ் தான் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.

  காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த போது திமுகவை மிரட்டி கூட்டணி பேரம் பேசப்பட்டது என்று அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டினார்.

  தேர்தலை சந்திக்க அதிமுக அரசு அச்சப்படுவதாக ஸ்டாலின் கூற, தேர்தலை சந்திக்க திமுகதான் அச்சப்படுகிறது. அதிமுக தயாராகவே உள்ளது என்று முதல்வர் பதில் அளித்தார்.

  திருவாரூர் தேர்தலை பார்த்து அதிமுக பயப்படுவது ஏன்? என்று ஸ்டாலின் கேட்க, திருப்பரங்குன்றம் தேர்தலை நீதிமன்றம் சென்று நிறுத்தியது திமுகதான் என்று முதல்வர் கூறினார்.

  ஜெயலலிதா இல்லாமல் இதுவரை தேர்தலை சந்திக்கவில்லை. சந்தித்துப் பாருங்கள உங்கள் பலம் தெரியும். ஜெயலலிதா இல்லாததால் ஆர்.கே. நகரில் அதிமுக தோல்வியடைந்தது என்று ராமசாமி கூறினார்.

  யார் முதுகிலாவது சவாரி செய்யும் நிலையில் தான் காங்கிரஸ் உள்ளது என்று அவருக்கு பதிலளிக்கும் வகையில் ஜெயக்குமார் கூறினார்.

  இதற்கு அதிமுக தனித்து போட்டியிட தயாரா என்று ராமசாமி கேட்க, அப்போது பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால் அதிமுகவும் தனித்துப் போட்டியிடும் என்று பதிலளித்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai