632 உடற்கல்வி சிறப்பாசிரியர்களுக்கு  4 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்க உத்தரவு

உடற்கல்வி ஆசிரியர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட 632 உடற்கல்வி சிறப்பாசிரியர்களுக்கு 4 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்றும், இந்த ஆசிரியர்கள் தேர்வுக்கான அறிவிப்பை ரத்து


உடற்கல்வி ஆசிரியர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட 632 உடற்கல்வி சிறப்பாசிரியர்களுக்கு 4 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்றும், இந்த ஆசிரியர்கள் தேர்வுக்கான அறிவிப்பை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
தமிழகத்தில் காலியாக உள்ள 632 உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான எழுத்துத் தேர்வு 2017, செப்டம்பர் 23 ஆம் தேதி நடந்தது. இதில் தேர்வான 632 பேரின் பெயர்களை 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. 
இந்நிலையில் இந்த தேர்வுக்கான அறிவிப்பாணையில் கல்வித்தகுதி குறித்து முறையாக குறிப்பிடப்படவில்லை எனக்கூறி, தேர்ச்சி பெற்றோரின் பட்டியலை ரத்து செய்ய வேண்டும். அதுவரை உடற்கல்வி ஆசிரியர் தேர்வுப் பட்டியலுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என நெல்லையைச் சேர்ந்த மலர்விழி உள்பட பலர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, தேர்வுக்காக வெளியிடப்பட்ட அரசின் அறிவிப்பாணை முறையாக இல்லை எனக்கூறி தேர்ச்சி பெற்றோரின் பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.
தொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தனித்தனியாக கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படும். இதனைக் கருத்தில் கொள்ளாமல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, திருவள்ளூரைச் சேர்ந்த செல்வம் உள்ளிட்ட பலர் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு மற்றும் மனுதாரர்கள் தரப்பில், முறையான கல்வித்தகுதி பெற்றவர்கள் தான் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர் எனக் கூறப்பட்டது.
இதையடுத்து உடற்கல்வி ஆசிரியர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு 2018, அக்டோபர் 12 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பை உறுதி செய்தும், தேர்வு அறிவிப்பை ரத்து செய்து பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 4 வாரத்தில் பணி நியமன ஆணைகள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
உடற்கல்வி ஆசிரியர் தேர்வுப் பட்டியலை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்டவர்களின் கல்வித்தகுதி குறித்து பரிசீலனை செய்ய குழு அமைத்து உரிய முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com