டிக் டாக் செயலியை முடக்கச் சொல்வது நியாயமா? உங்கள் கருத்தும் இதுவா பாருங்கள்!

செல்போன் செயலிகளில் தற்போது மக்களைக் கட்டிப் போட்டு வைத்திருப்பது டிக் டாக் செயலி என்றால் அது நிச்சயம் உண்மைக்கு மாறானதாக இருக்காது.
டிக் டாக் செயலியை முடக்கச் சொல்வது நியாயமா? உங்கள் கருத்தும் இதுவா பாருங்கள்!


சென்னை: செல்போன் செயலிகளில் தற்போது மக்களைக் கட்டிப் போட்டு வைத்திருப்பது டிக் டாக் செயலி என்றால் அது நிச்சயம் உண்மைக்கு மாறானதாக இருக்காது.

பலரும், காலையில் எழுந்ததும் கடவுள் படத்தைப் பார்க்கிறார்களோ இல்லையோ, டிக் டாக் விடியோவைப் பார்த்துத்தான் அன்றைய நாளைத் துவக்கும் நிலை ஏற்பட்டிருப்பதை கலி காலம் என்று சொல்லி ஒதுங்கிக் கொள்ள முடியாது. செயலி காலம் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.

இந்த நிலையில்தான், தமிழக சட்டப்பேரவையில் நேற்று எம்எல்ஏ தமிமும் அன்சாரியின் கேள்விக்கு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன் அளித்த பதில் பலரையும் திடுக்கிடச் செய்துள்ளது.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி பேசியது:
டிக்-டாக் என்ற செயலி சமூகத்தைச் சீரழித்து வருகிறது. அதில், ஆபாசக் காட்சிகள் அரங்கேற்றப்படுகின்றன. குடும்பப் பெண்கள் எல்லாம் தவறாகச் சித்திரிக்கப்படுகின்றனர். எனவே, இந்தச் செயலியைத் தடை செய்ய வேண்டும் என்றார்.

அப்போது, அமைச்சர் மணிகண்டன் எழுந்து கூறியது:
டிக்-டாக் செயலியால் தமிழக கலாசாரம் சீரழிக்கப்படுகிறது என்பது உண்மைதான். இது தொடர்பாக அரசியல்வாதிகளும், பொதுமக்களும் ஏற்கெனவே புகார் தெரிவித்துள்ளனர்.  புளுவேல் கேம்க்கு தடை விதித்ததுபோல மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, டிக் - டாக் செயலிக்குத் தடை விதிக்கப்படும் என்றார்.

டிக் டாக் செயலி என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்கு ஒரு சின்ன அறிமுகம்.. திரைப்படத்தில் வரும் சினிமா மற்றும் திரைப்படக் காட்சிகளின் பின்னணியில் பாடி, ஆடி, நடித்து தனிநபர்கள் தங்களது 15 நிமிட விடியோவை இந்த செயலியில் பதிவேற்றம் செய்யலாம். இந்த செயலியை வைத்திருக்கும் லட்சக்கணக்கானோர் அந்த விடியோவை பார்க்க முடியும்.

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இந்த செயலியை இதுவரை 10 கோடி பேர் டவுன்லோடு செய்துள்ளனர் என்கிறது புள்ளி விவரம்.

அதே சமயம், 104 உதவி எண்ணுக்கு டிசம்பர் மாதத்தில் மட்டும், டிக் டாக் தொடர்பாக குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு துன்புறுத்தல்கள் ஏற்படுவதாக தமிழகத்தில் இருந்து 36 தொலைபேசி வாயிலான புகார்கள் வந்துள்ளன. அது துன்புறுத்தல் முதல் டிக்-டாக் செயலிக்கு அடிமையாவது வரையிலான புகார்களாக உள்ளன.

பெண் போன்று ஆடை அணிந்து 23 வயது இளைஞர் பதிவேற்றிய விடியோ வைரலானதால், அவமானமடைந்து அவர் வியாசார்பாடியில் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமும், சென்னையில் அசோக் நகர் காவல்நிலையம் முன்பு டிக் டாக் விடியோ எடுத்த 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டதும், டிக்-டாக் செயலியின் சாபத்தால் நிகழ்ந்த ஒரு சில விளைவுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

டிக்-டாக் செயலி சீன நிறுவனத்தின் தயாரிப்பு. இந்த செயலிக்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஒருபக்கம், இதுபோன்ற விடியோக்கள் மூலம் சிலர் புகழ் அடைவதும், சினிமா மற்றும் தொலைக்காட்சி வாய்ப்புகளைப் பெறுவதையும் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

ஆனால், இளைஞர்களும், இளைஞிகளும் இதன் மூலம் தங்களது வாழ்க்கையை இழக்கும் அபாயமும் ஒருபக்கம்  இருக்கத்தான் செய்கிறது. ஏதோ ஒரு ஆசையில் ஆண் நண்பருடன் இணைந்து விடியோ வெளியிடும் பெண், பிறகு சமுதாயத்தால் அவமானப்படுத்தப்படும் போதோ அல்லது முகம் தெரியாத நபர்கள் மூலம் துன்புறுத்தலுக்கு ஆளாகும் போதும் அதை சரி செய்ய எந்த வழியும் இல்லாமல் போகலாம்.

நமது சமுதாயம் மிகவும் கண்ணியமான முறையில் கட்டமைக்கப்பட்ட கலாசாரத்தைக் கொண்டது. அதில் சில குறைபாடுகள் இருப்பினும், பல நம்பிக்கைகள் மனிதர்கள் நல்வழிப்பாதையில் பயணிக்க உதவுபவையாகவே இருக்கும். இந்த நிலையில், கலாசாரத்தை சீரழிக்கும் சிறு கடுகாக இருந்தாலும் அதனை ஆரம்பத்திலேயே நிறுத்துவது நல்லது என்று தமிழக அரசு கருதுகிறது.

இதுவே உங்கள் எண்ணமுமாக இருக்கலாம். அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி, பலருக்கும் பொழுதுபோக்கு விஷயமாக இருக்கும் டிக்-டாக் செயலியை செல்போன்களில் உயிரோடு வைத்திருக்க வகை செய்யலாம் என்றும் நினைக்கலாம்.

உங்கள் கருத்து எதுவோ?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com