கஜா புயலால் சம்பா சாகுபடியில் மகசூல் இழப்பு

கஜா புயலால் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமல்லாமல், மாவட்டம் முழுவதும் சம்பா சாகுபடியில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் அருகே அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சம்பா பருவ நெல் அறுவடைப் பணி.
தஞ்சாவூர் அருகே அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சம்பா பருவ நெல் அறுவடைப் பணி.

கஜா புயலால் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமல்லாமல், மாவட்டம் முழுவதும் சம்பா சாகுபடியில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் நிகழ் சம்பா பருவத்தில் 1.05 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால்,  98,841 ஹெக்டேரில் மட்டுமே சம்பா சாகுபடி செய்யப்பட்டது. இதில்,  இதுவரை ஏறத்தாழ 75,000 ஹெக்டேரில் அறுவடை முடிவடைந்துவிட்டது. முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வரும் அறுவடைப் பணிகள் 15 நாள்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இப்பருவத்தின் தொடக்கத்தில் (2018, ஆகஸ்ட் ) காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தாலும், கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் சென்றடையவில்லை. மேலும்,  திருச்சி மாவட்டம் முக்கொம்பில் தடுப்பணை உடைந்ததால், தண்ணீர் கொள்ளிடத்தில் திருப்பிவிடப்பட்டது. எனவே,  இப்பருவத்தில் காவிரியில் பெரு வெள்ளம் வந்தும்கூட, சாகுபடிக்குப் பயனில்லாமல் போய்விட்டது. மேலும்,  2018 ஆம் ஆண்டில் மாவட்டத்தில் மழையளவு 20 சதவீதம் குறைந்துவிட்டது. இதனால்,   மாவட்டத்தில் சம்பா சாகுபடியில் இயல்பான பரப்பளவை எட்ட முடியவில்லை. 
சாகுபடி செய்யப்பட்ட பயிர்களும் வளர்ச்சிப் பருவத்தை எட்டிய நிலையில்,  நவ. 16ஆம் தேதி வீசிய கஜா புயலால் பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு ஆகிய வட்டங்களில் ஏறத்தாழ 12,500 ஹெக்டேரில் நெற் பயிர்கள் சாய்ந்துவிட்டன. இப்பகுதிகளில் முன்பட்டச் சாகுபடியில் மேற்கொள்ளப்பட்ட அறுவடையில் சராசரியாக ஹெக்டேருக்கு 3,000 முதல் முதல் 4,000 கிலோ மட்டுமே மகசூல் கிடைத்தது.
மற்ற வட்டங்களில் நல்ல விளைச்சல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  அங்கும் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. புயல் காற்று மாவட்டம் முழுவதும் வீசியதால், சம்பா பருவ நெற் பயிர்கள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள விவரம் பயிர் அறுவடை சோதனை மூலம் தெரிய வருகிறது.
மாவட்டத்தில் 92 இடங்களில் பயிர் அறுவடை சோதனை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், இதுவரை கிட்டத்தட்ட 55 இடங்களில் இச்சோதனை முடிவடைந்துள்ளது. இதன் மூலம், சம்பா பருவத்தில் சராசரியாக ஹெக்டேருக்கு 4,800 கிலோ மட்டுமே மகசூல் கிடைப்பது தெரிய வந்தது. மாவட்டத்தில் இயல்பான மகசூல் அளவு ஹெக்டேருக்கு 6,000 கிலோ உள்ள நிலையில், நிகழாண்டு 1,200 கிலோ இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது:
கஜா புயலால் பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு ஆகிய வட்டங்களில் மட்டுமல்லாமல் மற்ற வட்டங்களிலும் பலத்தக் காற்று வீசியதால் நெற்பயிர்கள் முறிந்துவிட்டன. 
இதனால், வளர்ச்சிப் பருவத்தில் பூக்கள் கொட்டிவிட்டதால், தாள் மட்டும்தான் இருக்கிறது; நெல் மணிகள் இல்லை. ஏக்கருக்கு இயல்பாக 40 முதல் 45 மூட்டைகள் மகசூல் கிடைக்கும். 
ஆனால், இந்த ஆண்டு ஏக்கருக்கு சுமார் 20 மூட்டைகள் மட்டுமே மகசூல் கிடைத்தது என்றார் அவர்.
மாவட்டத்தில் சம்பா சாகுபடியின் இயல்பான பரப்பளவு 1.05 லட்சம் ஹெக்டேர் என்றாலும், 2016 - 17 ஆம் ஆண்டில் வறட்சி காரணமாக 81,000 ஹெக்டேரிலும், 2017 - 18  ஆம் ஆண்டில் காவிரி நீர் வரத்து இல்லாதது, மழை பொய்த்தது காரணமாக 96,000 ஹெக்டேரிலும் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து மூன்றாம் ஆண்டாகச் சாகுபடிப் பரப்பளவுக் குறைந்தது மட்டுமல்லாமல், மகசூல் இழப்பும் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com