கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது

சென்னை மாநகர மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு பூண்டி ஏரியை வந்தடைந்தது. 
பூண்டி ஏரிக்கு வேகமாக வரும் கிருஷ்ணா நதி நீர்.
பூண்டி ஏரிக்கு வேகமாக வரும் கிருஷ்ணா நதி நீர்.


சென்னை மாநகர மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு பூண்டி ஏரியை வந்தடைந்தது. 
கிருஷ்ணா கால்வாயில் விநாடிக்கு 39 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயரும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.     
தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி கடந்த 1996-ஆம் ஆண்டு முதல், கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு ஆண்டுதோறும் இரண்டு தவணைகளாக கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த ஒப்பந்தப்படி ஒவ்வொரு நீர் ஆண்டிலும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி, ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி என மொத்தம் 12 டிஎம்சி நீர் வழங்கப்பட வேண்டும். 
இந்த ஆண்டு இரண்டாவது தவணையாக ஜனவரி மாதத்தில் தண்ணீர் திறக்கப்படாததால் சென்னை மக்களின் குடிநீர்த் தேவைக்காக விரைவில் தண்ணீரைத் திறக்குமாறு தமிழக அரசு, ஆந்திர அரசிடம் கோரிக்கை விடுத்தது. இதேபோல், போதுமான தண்ணீர் இன்றி கருகி வரும் நெற்பயிர்களைக் காப்பாற்ற வேண்டும். எனவே, தெலுங்கு கங்கை திட்டத்தின்படி கிருஷ்ணா நதிநீர்க் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகளும் ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். 
இக்கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு கடந்த 7-ஆம் தேதி கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா கால்வாய் வழியாக அண்மையில் தண்ணீரைத் திறந்து விட்டது. முதல் கட்டமாக விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து கூடுதலாக 1000 கன அடி திறக்கப்பட்டு, தற்போது விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 
கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் 152 கி.மீ. தூரம் கடந்து ஆந்திர-தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டை கடந்த 10-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வந்தடைந்தது. அப்போது பொதுப் பணித் துறை பொறியாளர்கள் மலர்தூவி வரவேற்றனர். அதையடுத்து, அங்கிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு தண்ணீர் வந்தடைந்தது. தற்போதைய நிலையில் பூண்டி ஏரிக்கு 39 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இது குறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறுகையில் கிருஷ்ணா கால்வாய் நீர் வரத்தால் பூண்டி ஏரியில் நீர்மட்டம் படிப்படியாக அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளது. அதைத் தொடர்ந்து சென்னை மாநகர மக்களின் தாகத்தைத் தணிக்கும் வகையில் குடிநீருக்கு இணைப்புக் கால்வாய் மூலம் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்படும். தற்போதைய நிலையில் கிருஷ்ணா கால்வாயில் 2 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com