கொடைக்கானல் 2-வது முழுமைத் திட்டம்: மார்ச் முதல் வாரத்துக்குள் ஒப்புதல்: துணை முதல்வர் ஓ.பி.எஸ். உறுதி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் இரண்டாவது முழுமைத் திட்டத்துக்கு (மாஸ்டர் பிளான்) வரும் மார்ச் முதல் வாரத்துக்குள் ஒப்புதல் அளிக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் இரண்டாவது முழுமைத் திட்டத்துக்கு (மாஸ்டர் பிளான்) வரும் மார்ச் முதல் வாரத்துக்குள் ஒப்புதல் அளிக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
கொடைக்கானல் உள்ளூர் திட்டக் குழுமப் பகுதிக்கான மறு ஆய்வு முழுமைத் திட்டம் (மாஸ்டர் பிளான்) குறித்து திமுக உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதில்:-
கொடைக்கானல் மறு ஆய்வு முழுமைத் திட்டமானது உள்ளூர் திட்டக் குழுமத்தில் இருந்து நகர் ஊரமைப்புத் துறை இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை பரிசீலனை செய்ய வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு விரிவாக விவாதித்து வரைவு மறு ஆய்வு முழுமைத் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பரில் அரசுக்கு அளித்தது.
இந்தத் திட்டம் தொடர்பாக 2 மாதங்களுக்குள் 109 ஆட்சேபணைகள், ஆலோசனைகள் பெறப்பட்டன. இந்த ஆட்சேபணைகளின் மீது விரிவான அறிக்கையை உள்ளூர் திட்டக் குழுமத்திடம் வல்லுநர் குழு கேட்டது. இதனிடையே, கொடைக்கானல் நகரில் சில கட்டடங்கள் அனுமதியில்லாமல் அல்லது அனுமதி மீறி கட்டப்பட்டதாகவும், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. விதிகளை மீறிய கட்டடங்கள் தொடர்பான கள ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கொடைக்கானல் மறுஆய்வு முழுமைத் திட்டம் தொடர்பாக நடத்தப்பட்ட உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில், பொது மக்களிடம் இருந்து ஏற்கெனவே பெறப்பட்ட ஆட்சேபணைகள் பரிசீலிக்கப்பட்டு இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, மறு ஆய்வு முழுமைத் திட்டத்துக்கு வரும் மார்ச் முதல் வாரத்துக்குள் ஒப்புதல் அளிக்கப்படும்.
வல்லுநர்கள் ஆலோசனை: கொடைக்கானல் நகர் மலைவாழிடமாக உள்ளதாலும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளதாலும் விதிமீறிய கட்டடங்கள் குறித்து ஆராய்ந்து அந்தக் கட்டடங்களை எவ்வாறு நெறிப்படுத்துவது என்பது பற்றி சம்பந்தப்பட்ட வல்லுநர்கள், துறைகளின் ஆலோசனைகள் பெறப்பட்டு முடிவு செய்யப்படும் என்றார் துணை முதல்வர் 
ஓ.பன்னீர்செல்வம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com