தமிழ்ப் பல்கலை.யில் பண்பாட்டு அருங்காட்சியகம் அமைக்க முயற்சி

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் புதிதாக பண்பாட்டு அருங்காட்சியகம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கோ. பாலசுப்பிரமணியன்.


தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் புதிதாக பண்பாட்டு அருங்காட்சியகம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கோ. பாலசுப்பிரமணியன்.
தஞ்சாவூரில், இந்தியா-ஜப்பான் நாடுகளில் வரலாற்று, தொல்லியல் மரபு வள மேலாண்மையும், பண்பாட்டுச் சுற்றுலாவும்: பொருண்மைகளும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளும் என்ற தலைப்பிலான மூன்று நாள் இந்தியா - ஜப்பான் பன்னாட்டுக் கருத்தரங்கத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த அவர், மேலும் பேசியது:
தமிழ் மற்றும் ஜப்பானிய மொழிகள் இடையிலான மொழியியல் தொடர்புகள் குறித்து பெரும்பாலான ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ராபர்ட் கால்டுவெல் 1856-ஆம் ஆண்டில் வெளியிட்ட திராவிட மொழி குறித்த ஆய்வு நூலில் திராவிட மற்றும் ஜப்பானிய மொழிகள் இடையே மரபியல் தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மதுரையில் 1981-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்ற ஜப்பான் நாட்டுப் பேராசிரியர் சுசுமு ஓனோ வெளியிட்ட ஆய்வறிக்கையில்,  சங்கக் காலத் தமிழும்,  ஜப்பானிய மொழியில் மூதாதையர்கள் பயன்படுத்திய சொற்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பதாகக் கூறியுள்ளார். சங்கத் தமிழில் உள்ள 500 சொற்கள் ஜப்பான் மொழியில் காணப்படுகிறது எனவும் கால்டுவெல் கூறினார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பொற்கோ ஜப்பான் நாட்டுக்குச் சென்றபோது தமிழுக்கும் ஜப்பான் மொழிக்கும் உள்ள மொழியியல் தொடர்பு குறித்த வல்லுநர்களின் கட்டுரைகளைக் கொண்டு வந்தார். எனவே, தமிழ்நாடும்,  ஜப்பானும் வரலாற்று ரீதியாக நெருங்கிய தொடர்பும், பொதுவான மரபும் கொண்டிருக்கின்றன என்பது தெரிய வருகிறது. 
தமிழ்ப் பல்கலைக்கழகம் கலாசார மரபுக்கான பல்கலைக்கழகம். இதில், தமிழ்ப் பண்பாடு, மரபுக்கு முக்கியத்துவம் அளித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இப்பல்கலைக்கழகத்தில் கல்வெட்டு, இசை, நாடகம், ஓலைச்சுவடி, அரிய கையெழுத்து சுவடி, தொல்லியல், நாட்டுப்புறக் கலைகள், கடல்சார் வரலாறு, இலக்கியம், மொழியியல் உள்ளிட்ட தமிழ்ப் பண்பாடு தொடர்புடைய துறைகளே உள்ளன.
இப்பல்கலைக்கழகத்தில் புதிதாக பண்பாட்டு அருங்காட்சியகம் அமைப்பதற்காக மத்திய அரசிடம் ரூ. 15 கோடி கோருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான கருத்துரு தயார் செய்யப்பட்டு வருகிறது. ஈராயிரம் ஆண்டுகால தமிழ்ப் பண்பாட்டைச் சித்தரிக்கும் வகையில் பொருட்களை வைத்து இந்த அருங்காட்சியகம் அமைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த அருங்காட்சியகம் ஆட்சியரகத்தின் எதிரே பல்கலைக்கழகக் குடியிருப்பு வளாகத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது என்றார் துணைவேந்தர்.
தொடக்க விழாவில் புணே தக்காணக் கல்லூரி மதிப்புறு பேராசிரியர் க. பத்தையா, மத்திய தொல்லியல் துறை முன்னாள் இணை இயக்குநர் எஸ்.பி. ஓட்டா, புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவன பேராசிரியர் எ. சுப்பராயலு, ஜப்பான் நாட்டின் கோபே யமட்டோ பல்கலைக்கழகத்தின் சுற்றுலாத் துறைப் பேராசிரியர் மனபு கொய்கோ, தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடிப் புலத் தலைவர் பா. ஜெயக்குமார், கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறைத் தலைவர் சு. ராசவேலு, இணைப் பேராசிரியர் வீ. செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com