தெருவிளக்குகளைக் கண்காணிக்க மாவட்ட துணை ஆட்சியர்களுக்கு ஆணை

கிராமங்கள் தோறும் தெருவிளக்குகள் எரிகிறதா என்பதைக் கண்காணிக்க மாவட்ட துணை ஆட்சியர்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக


கிராமங்கள் தோறும் தெருவிளக்குகள் எரிகிறதா என்பதைக் கண்காணிக்க மாவட்ட துணை ஆட்சியர்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் ஆஸ்டின் பேசும்போது, கிராமங்களில் தெருவிளக்குகள்கூட சரியாக எரிவதில்லை. இதையெல்லாம் அதிமுகவினர் நேரில் சென்று பார்த்தால்தான் தெரியும் என்றார்.
அப்போது,  முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டுக் கூறியது:
மாவட்ட ஆட்சித் தலைவர்களை எல்லாம் நேரடியாக ஏற்கெனவே அழைத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னென்ன பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று தலைமைச் செயலகத்தில் வைத்து 3 மணி நேரம் குறைகளைக் கேட்டறிந்து, உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி  செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளேன்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு மூன்று ஒன்றியத்துக்கு ஒரு துணை மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்பட்டு, அவர் ஆங்காங்கே நேரடியாக கிராமங்களுக்குச் சென்று, அந்த கிராமத்தில் என்னென்ன குறைகள் இருக்கிறது என்று கேட்டறிந்து அதை நிவர்த்தி  செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இரவிலும் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆணை  பிறப்பித்துள்ளோம். காலையில் சென்றால் எந்தெந்த தெருவிளக்குகள் எரிகிறது எனத் தெரியாது என்பதால் இரவில் சென்று பார்க்க உத்தரவிட்டுள்ளோம். 
ஒவ்வொரு மாலை நேரத்திலும், பல்வேறு துறைகளில் இருக்கும் துணை மாவட்ட ஆட்சியர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட, கிட்டத்தட்ட இரண்டு, மூன்று ஒன்றியங்களில் உள்ள கிராமங்களுக்குச் சென்று அங்கே தெருவிளக்குகள் எரியவில்லை என்றால் உடனடியாக மாற்றி அமைக்க வேண்டுமென்று ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. 
ஒவ்வொரு ஒன்றியத்துக்கும், ஒரு குறிப்பிட்ட சதவிகிதம், உதாரணமாக 10 சதவிகிதம் தெருவிளக்குகள் அங்கே இருப்பு வைத்திருக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. பல்புகள் எரியவில்லை என்றால், உடனடியாக மாற்ற வேண்டும் எனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
அதேபோல, குடிநீர் குழாய்களை எல்லாம் சரி செய்ய வேண்டும், எந்தெந்த பகுதியில் குடிநீர் வரவில்லையோ அதையெல்லாம் உடனடியாக நிவர்த்தி  செய்ய வேண்டுமென்று ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com