தொடங்கிவிட்டது கூட்டணிப் பேரம்! 

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவருவதற்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் எல்லா அரசியல் கட்சிகளும் தங்களது வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ள கூட்டணி
தொடங்கிவிட்டது கூட்டணிப் பேரம்! 


மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவருவதற்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் எல்லா அரசியல் கட்சிகளும் தங்களது வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ள கூட்டணி அமைப்பதில் மும்முரமாக இறங்கி இருக்கின்றன. ஓர் ஆண்டுக்கு முன்பே உறுதியாகிவிட்டது என்று கருதப்படும் திமுகவேகூடத் தனது தற்போதைய கூட்டணியில் மாற்றம் ஏற்படுத்திக் கொண்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிற அளவில் பரபரப்பாக திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
கூட்டணியில் எந்தெந்தக் கட்சிகள் இருக்கும் என்பது குறித்து இப்போது சொல்ல முடியாது என்கிற திமுக பொருளாளர் துரைமுருகனின் கருத்து, திமுக கூட்டணியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மதிமுகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கூட்டணியிலிருந்தே வெளியேற்றப்படும் என்பதற்கான சமிக்ஞைதான் துரைமுருகனின் அறிவிப்பு என்று பலராலும் கருதப்படுகிறது. 
தமிழ்நாடு காங்கிரஸில் ஏற்பட்டிருக்கும் தலைமை மாற்றம் எந்த அளவுக்குத் தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாவிட்டாலும், காங்கிரஸ் கட்சியின் கூட்டணி குறித்த அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம். திருநாவுக்கரசர் தலைவராக இருந்தபோது, மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு இரட்டை இலக்க இடங்கள் தரப்பட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். 
புதிய தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் கே.எஸ். அழகிரி குறைவான இடங்களுக்கு ஒப்புக்கொண்டால், காங்கிரஸ் வாக்காளர்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா என்கிற கேள்வி ஏற்கெனவே காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுப்பப்படுகிறது.
 2004  மக்களவைத் தேர்தலில் 10 இடங்களும், 2009 மக்களவைத் தேர்தலில் 16 இடங்களும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டன. இப்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலினே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருக்கும் நிலையில் காங்கிரஸுக்குக் குறைந்த அளவு இடங்களை ஒதுக்கிவிட மாட்டார் என்கிற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்.
 இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும் இருந்த மூத்த அரசியல்வாதி  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் கே.எஸ். அழகிரி. திமுக ஊழல் கட்சி என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முத்திரை குத்தியது குறித்து அவருக்குத் தெரியாமல் ருந்திருக்காது. தலைவர் அழகிரி கூறியதில் தவறில்லை என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்புவும் வழிமொழிந்திருப்பதிலிருந்து, திமுக கூட்டணியில் அதிக இடங்களுக்கான தங்கள் பேரத்துக்கு வலு சேர்க்க காங்கிரஸ் விரும்புகிறது என்றுதான் இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
திமுக தலைமை இரண்டு விதமான பிரச்னைகளை எதிர்கொள்கிறது. ஏற்கெனவே இருக்கும் தோழமைக் கட்சிகளுடன் முறையான கூட்டணியை அமைத்து அறிவிப்பது முதல் பிரச்னை. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு அவர்கள் கோரும் அளவில் இல்லையென்றாலும், அவர்களைத் திருப்திப்படுத்தும் அளவிலாவது இடங்களை ஒதுக்கியாக வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது.  மூன்று இடங்களுக்குக் குறையாமல் எதிர்பார்க்கும் மதிமுக, மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இரண்டு இடங்களுக்குக் குறைவாக ஒப்புக் கொள்ளாது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைவிடத் தனக்கு ஒரு இடமாவது அதிகம் தரப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கட்டாயம் கோரும்.


நீண்டநாள் தோழமைக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீகையும் புறக்கணிக்க முடியாது. மனிதநேய மக்கள் கட்சியையும் கூட்டணியிலிருந்து விட்டுவிட முடியாது. இரண்டு கட்சிகளுக்கும் தலா ஒரு இடமாவது ஒதுக்க வேண்டும். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒப்புக்கொள்ளும். மனிதநேய மக்கள் கட்சி ஒப்புக்கொள்ளுமா என்பது அடுத்த கேள்வி.
திமுக கூட்டணியில் அதிருப்தி ஏற்படுவதால் இந்தக் கட்சிகள் டி.டி.வி. தினகரனின் அம்மா முன்னேற்றக் கழகத்துடன் சேராவிட்டாலும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கைகோப்பதற்கான வாய்ப்பை ஒரேயடியாக ஒதுக்கிவிட முடியாது. காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், சிறுபான்மை கட்சிகள் ஆகியவற்றை இணைத்துக்கொண்டு திமுக, அதிமுகவுக்கு மாற்று அணி ஒன்றை உருவாக்குவதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் காத்துக் கொண்டிருக்கிறார்.
திமுக எதிர்கொள்ளும் இன்னொரு பிரச்னை, எதிரணி பலமடைந்து விடக் கூடாது என்பது. அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, சமத்துவ மக்கள் கட்சி, இந்தியக் குடியரசுக் கட்சி, புதிய தமிழகம், கொங்கு மக்கள் கட்சி என்று வலுவான எதிர்க் கூட்டணி அமைந்துவிடாமல் பார்த்துக்கொள்வதிலும் திமுக முனைப்பாக இருந்து வருகிறது. ஏற்கெனவே, அதிமுக - பாஜகவுக்கு எதிரான வாக்குகளைப் பிரித்து திமுக அணியை டி.டி.வி. தினகரன் பலவீனப்படுத்தி இருக்கும் நிலையில், எதிரணியும் வலுவாகிவிடுவது திமுக எதிர்பார்க்கும் அளவிலான வெற்றிக்கு முற்றுப்புள்ளியாகி விடக்கூடும்.
வர இருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறும் இடங்களைப் பொருத்துத்தான், தங்களது அரசியல் எதிர்காலம் அமையும் என்பதால் எல்லா அரசியல் கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு திரைமறைவில் பேரத்தில் மும்முரமாக ஈடுபடத் தொடங்கிவிட்டன.
கூட்டணிக் கட்சிகளின் அழுத்தம் தாங்க முடியாமல் போனால் திமுக தலைமை என்ன செய்யும்? கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதா சொன்னதைப்போல, அத்தனை தொகுதிகளிலும் தனியாகப் போட்டியிட்டு, கருத்துக்கணிப்புகள் கூறுவதுபோல 39 இடங்களிலும் வெற்றி பெறுவோம் என்று துணிந்து முடிவெடுக்கும் நிலையில் திமுக இல்லை என்பது மட்டும் நிச்சயம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com