மக்களவைத் தேர்தல்: பாஜக கூட்டணி விரைவில் அறிவிப்பு: பாஜக தேசியச் செயலர் முரளிதர்ராவ்

மக்களவைத் தேர்தலுக்கான பாஜக கூட்டணி ஓரிரு நாள்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என பாஜக தேசியச் செயலர் தமிழக, புதுவை பாஜக பொறுப்பாளருமான முரளிதர்ராவ் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல்: பாஜக கூட்டணி விரைவில் அறிவிப்பு: பாஜக தேசியச் செயலர் முரளிதர்ராவ்


மக்களவைத் தேர்தலுக்கான பாஜக கூட்டணி ஓரிரு நாள்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என பாஜக தேசியச் செயலர் தமிழக, புதுவை பாஜக பொறுப்பாளருமான முரளிதர்ராவ் தெரிவித்தார்.
புதுவை மாநில மீனவப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் உள்ள தனியார் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. 
இதில் கலந்துகொண்ட பாஜக தேசியச் செயலரும், கட்சியின் தமிழகம், புதுவை மாநிலங்களுக்கான மேலிடப் பொறுப்பாளருமான முரளிதர்ராவ், மீனவப் பிரதிநிதிகளின் கோரிக்கைகளையும், அவர்களது தேவைகளையும் கேட்டறிந்தார். 
கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனர். கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களுக்கு முரளிதர்ராவ் அளித்த பேட்டி:
பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து நாடு முழுவதும் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, புதுவையில் உள்ள மீனவப் பிரதிநிதிகளிடம் தற்போது கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. 
மீனவர்களின் கோரிக்கைகள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம் பெறும். பாஜக தேர்தல் அறிக்கை அனைத்துத் தரப்பினருக்கும் திருப்தியளிக்கும் வகையில் இருக்கும். 
கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுவையில் பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது போல, இந்தத் தேர்தலிலும் கூட்டணி அமைத்துப் போட்டியிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். 
வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. கூட்டணி உறுதியாகிவிட்டது. 
ஓரிரு நாள்களில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். தமிழகம், புதுவையில் பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்றார் அவர்.முன்னதாக, நடைபெற்ற கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவரும், நியமன எம்எல்ஏவுமான வி. சாமிநாதன், துணைத் தலைவர் ஆர்.செல்வம், நியமன எம்எல்ஏக்கள் கே.ஜி. சங்கர், எஸ்.செல்வகணபதி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com