அரவக்குறிச்சி பூலாம்வலசில் நாளை சேவல் சண்டை தொடக்கம்

4 ஆண்டுகளுக்குப் பிறகு கடும் கட்டுப்பாட்டுடன் நீதிமன்ற அனுமதியோடு அரவக்குறிச்சி பூலாம்வலசில் வரும் வெள்ளிக்கிழமை (15-ம் தேதி) சேவல் சண்டை தொடங்குகிறது.
போட்டி நடைபெற உள்ள இடத்தில் போட்டி நடத்துவோர் கட்டி வைத்துள்ள சண்டை சேவல்.
போட்டி நடைபெற உள்ள இடத்தில் போட்டி நடத்துவோர் கட்டி வைத்துள்ள சண்டை சேவல்.


4 ஆண்டுகளுக்குப் பிறகு கடும் கட்டுப்பாட்டுடன் நீதிமன்ற அனுமதியோடு அரவக்குறிச்சி பூலாம்வலசில் வரும் வெள்ளிக்கிழமை (15-ம் தேதி) சேவல் சண்டை தொடங்குகிறது.

தமிழகத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக இருப்பது சாவக்கட்டு எனப்படும் சேவல் சண்டை. 

ருசிகரப் போட்டியாக கருதப்படும் சேவல் சண்டை தமிழகத்தில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த பூலாம்வலசில் பாரம்பரியமாக கடந்த 120 ஆண்டுகளாக  நடந்து வந்தது. 

இந்நிலையில் கடந்த 2014-இல் நடந்த போட்டியில் சேவலில் கட்டியிருந்த கத்தி போட்டியாளர் இருவரையும், பார்வையாளரையும் குத்திக் கிழித்ததில் மூவரும்  இறந்தனர். இதனால்கரூர் மாவட்டத்தில் இந்தப் போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டது. 

இதனிடையே மத்திய அரசும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததால் ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை இனி தமிழகத்தில் நடைபெறுமா என்ற கேள்வியெழுந்தது. இதனிடையே ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதியோடு சேவல் சண்டை போட்டி நடக்கிறது.

இதுதொடர்பாக கோயில் விழா கமிட்டித் தலைவர் ஆனந்தன் கூறியது:

இங்குள்ள மகாமாரியம்மன், முத்தாலம்மன் கோயில் திருவிழா வரும் 15-ஆம் தேதி தொடங்குவதை முன்னிட்டு இப் போட்டி நடக்கிறது. போட்டியில் பங்கேற்க கர்நாடகம், ஆந்திரம், கேரள மாநிலங்களில் இருந்தும், தஞ்சாவூர், மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் சேவல் கொண்டுவருவர்.

இந்தப் போட்டி, போக்குவரத்துத் துறை அமைச்சரின் ஏற்பாட்டில் நீதிமன்ற அனுமதியோடு நடக்கிறது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது நடத்துவோம். ஆனால் இம்முறை கோயில் திருவிழாவையொட்டி நடத்துகிறோம். எப்படியும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இப் போட்டியைக் காண வருவார்கள் என்றார்.

சேவல் இறந்தால் கைது நடவடிக்கை 
மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் கூறுகையில், போட்டியை விழாக் குழுவினர் நடத்துவார்கள், நாங்கள் பாதுகாப்பு கொடுப்போம். ஜல்லிக்கட்டின்போது  என்னென்ன விதிகள் கையாளப்படுமோ, அதை இப் போட்டியிலும் நடைமுறைப்படுத்துவோம். யாரேனும் சேவலை துன்புறுத்தும் வகையில் கத்தி கட்டிவிட்டாலோ அல்லது சேவல் சாவது போன்று எந்தவொரு சம்பவமும் நிகழ்ந்தாலோ சம்பந்தப்பட்டோர் மிருகவதைச் சட்டத்தில்  உடனே கைது செய்யப்படுவர் என்றார் அவர்.

எப்படி நடத்தப்படுகிறது இந்தப் போட்டி?
சேவல் சண்டைக்கு அசில் இனச் சேவல்களே பயன்படுத்தப்படுகின்றன. அதாவது மயில், காகம், வள்ளூரு, ஆந்தை, கோழிபூதம் என அவற்றின் கொண்டை வடிவம் கொண்டு சண்டைச் சேவல்கள் வகைப்படுத்தப்படுகின்றன.  சண்டையானது சேவல்கட்டு, கோச்சை, வெப்போர், வெற்றுக்கால் சண்டை என வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் வெப்போர், கத்திக் கட்டு என இரு வகைகளில் மட்டுமே அண்மைக் காலமாக நடந்து வருகிறது.

கத்திக் கட்டு போட்டி: சேவல்களின் கால்களில் கூர்மையான சிறு கத்தியைக் கட்டி போட்டிக்கு விடுவது. இதில் சேவலைக் கையில் ஏந்தியபடி எதிர்ச் சேவலை மோதல் காட்டி கீழே தரையில் விட்டபின் சேவல்கள் ஆக்ரோஷத்துடன் மோதும். சேவல்களின் கால்களில் உள்ள கத்தி எதிர்ச் சேவலின் மீது பட்டு காயங்களால் அந்தச் சேவல் சோர்வடைந்து விழும் அல்லது களத்தைவிட்டு ஓடினால் தோல்வியடைந்ததாகக் கருதப்படும்.

வெப்போர் போட்டி: வெற்றுக்கால் சேவல் சண்டை அல்லது வெப்போர் என்னும் சேவல் சண்டையில் சேவலின் காலில் கத்தியைக் கட்டாமல் வெற்றுக் கால்களுடன் போட்டி நடக்கும். இந்த வகை சண்டைக்கு அசில் வகை சேவல்களையே அதிகம் பயன்படுத்துவர். 

போட்டியில் ஒவ்வொரு சேவலுக்கும் ஒரு மணி நேரம் வழங்கப்படும். மூக்கை கீழே வைத்தாலோ, ஓட்டம் பிடித்தாலோ அந்தச் சேவல் தோல்வியைத் தழுவியதாகக் கருதப்படும்.

போட்டி தொடங்கும் முன் இரு போட்டியாளர்களும் தங்களது சேவல்களை களத்தில் நேருக்கு நேர் பார்க்கும்படி நிறுத்திவிட்டு, பிறகு கையில் எடுத்துக் கொள்வர். இதற்கு நடவு விடுதல் என்று பெயர். இதன் மூலம் சேவலுக்கு எதிரி அடையாளம் காட்டப்படுகிறது. பின்னர் இரு சேவல்களையும் அருகே நெருங்கவிட்டு உசுப்பேற்றி, அவை ஆவேசமடைந்து ஒன்றையொன்றை தாக்க ஓடி வரும்போது போட்டியாளர்கள் தங்களது சேவல்களை சண்டையிடாமல் கையில் பிடித்துக் கொள்வர். இதற்கு முகைய விடுதல் என்று பெயர். அதன்பின்பு இரு சேவல்களையும் மோத விடுவர். இதற்கு பறவை இடுதல் என்று பெயர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com