கவிமணி தேசிய விநாயகம் பிள்ளைக்கு கன்னியாகுமரியில் ரூ.1 கோடியில் மணிமண்டபம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளைக்கு கன்னியாகுமரியில் ரூ.1 கோடியில் மணிமண்டபம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார். 
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளைக்கு கன்னியாகுமரியில் ரூ.1 கோடியில் மணிமண்டபம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளைக்கு கன்னியாகுமரியில் ரூ.1 கோடியில் மணிமண்டபம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் வெளியிட்டுள்ளார். 

அதன் விவரம்,
1. எளிமையான தோற்றமும், ஞானத்தின் உச்சமும், குழந்தைகள் மீது அளவற்ற அன்பும் கொண்டவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. குழந்தைகள் விரும்புகின்ற கவிதைகளைத் தந்து, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற அன்னாருக்கு ஜெயலலிதா கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு உருவ வெண்கலச் சிலையினை அமைத்து பெருமை சேர்த்தார்கள். தமிழ் அன்னைக்கு தனது பாடல்களால் மலரும், மாலையும் சூட்டி அழகு பார்த்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு, அன்னாருடைய பிறந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம், தேரூரில் மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று, ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் அமைக்கப்படும். 

2. கி.பி.7ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் களம் பல கண்டு, வெற்றிகள் பல கொண்டு ஆட்சி செய்தவர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் ஆவார். அவரின் வீரத்தை பெருமைப்படுத்தும் விதத்தில் 1996-ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாநகரில் ஜெயலலிதா, அரசு சார்பில் சிலை ஒன்றை நிறுவினார்கள். அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, அவருடைய புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதத்தில், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் அமைக்கப்படும். 

3. இரட்டைமலை சீனிவாசன் அரசியல்வாதி, சமூக சீர்திருத்தவாதி, வழக்கறிஞர் என பன்முகங்களைக் கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகக் குரல் கொடுத்தவர். அவருடைய சேவையை பாராட்டி, அன்னாருக்கு ‘ராவ் சாகிப்’, ‘திவான் பகதூர்’, ‘ராவ் பகதூர்’ போன்ற பட்டங்களை பிரிட்டிஷ் அரசு வழங்கி கௌரவப்படுத்தியது. அன்னாரை பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று, இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் பிறந்த இடமான மதுராந்தகம் அருகில் உள்ள கோழியாளம் கிராமத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபமும், அதிலேயே நூலகமும் அமைக்கப்படும்.

4. விவசாயக் குடும்பத்தில் பிறந்து, விவசாயிகளின் நலனைக் காக்க பரம்பிக்குளம் ஆழியாறு அணைக்கட்டுத் திட்டம் தொடங்க காரணகர்த்தாவாக இருந்தவர் வி.கே.பழனிசாமி கவுண்டர். அவர் சட்டமன்ற மேலவை துணைத் தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். அப்பகுதி மக்களின் கோரிக்கையினை ஏற்று வி.கே.பழனிசாமி கவுண்டரை சிறப்பு செய்யும் விதமாக அவர் பிறந்த இடமான கோயம்புத்தூர் மாவட்டம் வேட்டைக்காரன் புதூரில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். 5. வழக்கறிஞராக பணியினைத் தொடங்கி, சென்னை மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும், உள் துறை மற்றும் நிதித் துறை அமைச்சராகவும் பணிபுரிந்து, ஆங்கிலேயே அரசால் “ராவ் பகதூர்” மற்றும் “சர்” பட்டங்களையும் பெற்றவர் சர். ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள். நீதிக்கட்சியின் வைரத் தூண் என்று அழைக்கப்பட்ட அன்னாருக்கு அப்பகுதி மக்களின் கோரிக்கையினை ஏற்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருவுருவ சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைத்து, ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். 

6. நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் காவேரியின் குறுக்கே தடுப்பணை அமைத்து சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன் பெற, ராஜ 4 வாய்க்கால் ஏற்படுத்தியவர் அல்லாள இளைய நாயகர். இன்றளவும் அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாகவே திகழ்கின்ற அக்கால்வாயை அமைத்த அன்னாரை பெருமைப்படுத்தும் வகையில், அப்பகுதி விவசாய பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று திரு. அல்லாள இளைய நாயகர் அவர்களுக்கு ஜேடர்பாளையத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குவிமாடத்துடன் திருவுருவச் சிலை அமைக்கப்படும். 

7. பூலித்தேவன் படையில் படைவீரனாகவும், படைத் தளபதியாகவும் இருந்த விடுதலைப் போராட்ட வீரரான ஒண்டிவீரனுக்கு 2016ஆம் ஆண்டு, ஜெயலலிதா மணி மண்டபம் அமைத்து திறந்து வைத்தார்கள். அன்னாரது பெருமையை மேலும் சிறப்பிக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒண்டிவீரன் மணி மண்டபத்தை 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பதுடன், அந்த வளாகத்தில் ஒரு நூலகமும் அமைக்கப்படும். 

8. நேர்மை, வீரம், புத்திக்கூர்மை ஆகியவற்றை ஒருங்கே கொண்டு, வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத் தளபதியாக விளங்கியவர் வீரன் சுந்தரலிங்கம். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே வெள்ளையருக்கு எதிராக முதல் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தியவர் வீரன் சுந்தரலிங்கனார. அன்னாருக்கு 14.6.2005 அன்று தூத்துக்குடி மாவட்டம் கவர்ணகிரியில் மணி மண்டபம் அமைக்க ஆணை வெளியிட்டு ஜெயலலிதா பெருமை சேர்த்தார்கள். அவருக்கு மேலும் பெருமை சேர்க்க அரசு கவர்ணகிரியில் அமைந்துள்ள வீரன் 5 சுந்தரலிங்கனார் மணி மண்டபத்தை 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பதுடன், ஒரு நூலகமும் அதிலேயே அமைக்கும். 

அரசு விழாக்கள் 
9. துணிச்சல், மன உறுதி, தன்னம்பிக்கையுடன் விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை தனது சொந்த செலவில் கட்டி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் பாசன வசதி பெற வழிவகுத்த கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் பிறந்த நாளினை ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாட அப்பகுதி விவசாய பெருமக்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கையினை ஏற்று கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் பிறந்த நாளான ஜனவரி மாதம் 15ஆம் நாள் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும். 

10. பவானி ஆறு காவேரி ஆற்றுடன் கூடும் இடத்திற்கு சற்று முன்பே அணை கட்டி பவானி ஆற்றின் நீரை வாய்க்கால் மூலம் நேராகக் கொண்டு சென்றால் தண்ணீர் விரைந்து ஓடிவிடும் என்பதாலும், வாய்க்கால்களை வளைத்து வளைத்து வெட்டுவதனால் அதிக பரப்பளவு பாசனம் பெறும் என்ற தொலைநோக்கு சிந்தனையுடனும், விவசாயிகளின் நலன்களுக்காக வாய்க்கால்களை திறம்பட வெட்டி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தை மாதம் 5ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணித்தவர் காலிங்கராயன். அன்னாரை சிறப்பு செய்யும் வகையில் தை மாதம் 5ஆம் தேதியன்று பொது மக்கள் சார்பாக காலிங்கராயன் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்கு மேலும் சிறப்பு செய்யும் விதமாக 13.5.2018 அன்று அவரது முழு உருவ வெண்கல சிலையுடன் கூடிய மணி மண்டபம் என்னால் திறந்து வைக்கப்பட்டது. காலிங்கராயனின் நினைவைப் 6 போற்றுகின்ற வகையில் ஆண்டுதோறும் தை மாதம் 5ஆம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும். 

11. சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக் கோனின் வீரத்தையும் வரலாற்றையும் உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில், சென்னை எழும்பூரில் அமைக்கப்பட்ட சிலையை 15.3.1996 அன்றும், தூத்துக்குடி மாவட்டம், கட்டாளங்குளத்தில் நினைவு மண்டபத்தை 8.12.2014 அன்றும், ஜெயலலிதா திறந்து வைத்து அன்னாருக்கு பெருமை சேர்த்தார்கள். தூத்துக்குடி மாவட்டம், கட்டாளங்குளத்தில் உள்ள அன்னாரது நினைவு மண்டபத்தில் ஆண்டுதோறும், அவரது பிறந்த நாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னாருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக, சென்னை, எழும்பூரில் அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வீரன் அழகுமுத்துக் கோன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு ஆண்டுதோறும் ஜூலை 11ஆம் நாள் அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்பிக்கப்படும். 

12. இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழ் அறிஞரும், சிலப்பதிகாரத்தின் மீது ஆளுமை கொண்டிருந்த சிலம்புச் செல்வர் என அனைவராலும் அறியப்பட்டவர், முன்னாள் மேலவைத் தலைவர் ம.பொ.சிவஞானம். மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையின்போது, சென்னையை தமிழ்நாட்டின் தலைநகராக தொடரச் செய்யவும், திருத்தணி, செங்கோட்டை பகுதிகளையும், கன்னியாகுமரி மாவட்டத்தையும் தமிழ்நாட்டுடன் இணைக்க பாடுபட்டவர்; எழுத்து சீர்திருத்தத்தின் போது ‘ஐ’-யும், ‘ஒள’-வும் தமிழ் மொழியில் தொடரச் செய்தவர் 7 திரு. ம.பொ.சிவஞானம். அவரது தமிழ் தொண்டினை போற்றிடும் வகையில், சென்னை, தியாகராய நகரில் அமைக்கப்பட்டுள்ள ம.பொ.சிவஞானத்தின் திருவுருவச் சிலைக்கு அன்னாரின் பிறந்த நாளான ஜூன் 26 அன்று அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்பிக்கப்படும்.

13. தமிழ்நாட்டில் இதழியல் முன்னோடியும், இன்றைய முன்னணி நாளிதழ்களில் ஒன்றான “தினத்தந்தி” தமிழ் நாளிதழைத் தொடங்கி, பாமரரும், பாட்டாளியும் எளிய தமிழ் மூலம் படிக்க வழிவகை செய்தவர் திரு. சி.பா.ஆதித்தனார். தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டப் பேரவையின் அவைத் தலைவராகவும், கூட்டுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர் சி.பா.ஆதித்தனார். தமிழ் ஆர்வலர்கள் அன்னாரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென்று விடுத்த கோரிக்கையினை ஏற்று, சென்னை எழும்பூரில் அமைந்துள்ள சி.பா.ஆதித்தனாரின் திருவுருவச் சிலைக்கு அவர் பிறந்த நாளான செப்டம்பர் 27 அன்று அரசின் சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி சிறப்பிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com