செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குநரை நியமிக்க வேண்டும்: ராமதாஸ்

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு நிரந்தரமாக இயக்குநரை நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு நிரந்தரமாக இயக்குநரை நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ் மொழியின் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்காக அமைக்கப்பட்ட  செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கிக்கிடப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. செம்மொழி நிறுவனத்துக்கான ஆண்டு நிதி ஒதுக்கீடும் 92 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே அதற்கு முழுநேர இயக்குனர் நியமிக்கப்படவில்லை. மாறாக, இது மத்திய நிறுவனம் என்பதைக் காரணம் காட்டி, சென்னையிலுள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் இருந்து ஒருவரை பொறுப்பு இயக்குனராக நியமிப்பது வழக்கமாக உள்ளது.
இதில் கொடுமை என்னவென்றால், சென்னை ஐ.ஐ.டி.யில் பணியாற்றும் பேராசிரியர்களில் ஒருவரைத் தான் பொறுப்பு இயக்குனராக நியமித்து வந்துள்ளனர். அவ்வாறு நியமிக்கப்படுபவர்களில் பலருக்கு தமிழே தெரியாது. அப்படிப்பட்டவர்கள் தமிழ் வளர்ச்சிக்கு எவ்வாறு பங்களிப்பார்கள்? செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் செயல்படக்கூடாது என்பதில் மத்திய அரசு எந்த அளவுக்கு தீவிரம் காட்டுகிறது என்பதை இதிலிருந்தே உணர முடியும். 
 இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த 120-க்கும் மேற்பட்ட பணியாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டு விட்டனர். இந்த நிறுவனத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு 41 நிரந்தர பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், இன்று வரை அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அதனால் தான் ஒரு காலத்தில் இந்நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டு வந்த ஆண்டு நிதி ரூ.25 கோடியில் இருந்து வெறும் ரூ.2 கோடியாக குறைக்கப்பட்டு விட்டது. ஆராய்ச்சிகளும் நடைபெறவே இல்லை.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு உடனடியாக நிலையான இயக்குநரை நியமிக்க வேண்டும். நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து, தமிழாய்வுப் பணிகளை விரைவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com