
கும்பகோணம் நாகேசுவரன் கோயிலில் உள்ள சோழர்காலக்கல் வெட்டுகளைப் புதன்கிழமை பார்வையிட்டு குறிப்பெடுக்கும் பிரான்ஸ் நாட்டு மாணவர்கள்.
கும்பகோணம் நாகேசுவரன் கோயிலில் உள்ள சோழர் கால கல்வெட்டுகளையும், சிற்பங்களையும் பிரான்ஸ் நாட்டு மாணவர்கள் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் உள்ள சர்போனே என்ற பல்கலைக்கழகத்தில் வரலாறு, கலை மற்றும் தொல்லியல் துறையைச் சேர்ந்த 8 மாணவர்கள், பேராசிரியைகள் கேரின் லாத்ரீச், ஹர்லோட்டி ஸ்மித் தலைமையில் இருவார பயணமாக அண்மையில் தமிழகம் வந்தனர்.
இவர்கள் சென்னை, காஞ்சிபுரம், மாமல்லபுரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள புகழ்பெற்ற கோயில்களுக்குச் சென்று பல்லவர் காலக் கட்டடக்கலை, சிற்பங்களைப் பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து, கும்பகோணத்துக்கு புதன்கிழமை வந்த இவர்கள் நாகேசுவரன் கோயிலில் உள்ள சோழர் கால கல்வெட்டுகளையும், சிற்பங்களையும் நாள் முழுவதும் பார்வையிட்டு, அதைக் குறிப்பெடுத்துக் கொண்டனர்.
இதேபோல, தஞ்சாவூர் பெரியகோயில், கங்கை கொண்டசோழபுரம் ஆகிய இடங்களுக்கு வியாழக்கிழமை செல்ல உள்ளனர்.
இதுகுறித்து பிரான்ஸ் நாட்டில் படிக்கும் சென்னையைச் சேர்ந்த மாணவி இந்துஜா தெரிவித்தது:
பிரான்ஸ் நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்கும் நாங்கள் சோழர்கள், பல்லவர்களின் வரலாறு, கட்டடக்கலை, கல்வெட்டுகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு, அவற்றை குறிப்பெடுத்துக் கொண்டோம். இந்த ஆய்வறிக்கையை எங்களது பல்கலைக்கழகத்தில் அளிப்போம் என்றார் அவர்.