தமிழகத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப காவலர்கள் உள்ளனரா?: உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் மக்கள்தொகைக்கு ஏற்ப காவலர்கள் உள்ளனரா? என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப காவலர்கள் உள்ளனரா?: உயர்நீதிமன்றம் கேள்வி


தமிழகத்தில் மக்கள்தொகைக்கு ஏற்ப காவலர்கள் உள்ளனரா? என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் 8.25 கோடி மக்கள்தொகை உள்ளது. சென்னையில் 135 காவல் நிலையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 1,324 காவல் நிலையங்கள் உள்ளன. ஆனால் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு காவலர்கள் எண்ணிக்கை இல்லை. இதனால் தமிழகத்தில் தினமும் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
 கொலை, சங்கிலி பறிப்பு, கொள்ளை, ஆள் கடத்தல், ஏடிஎம் திருட்டு என நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது தமிழகத்தில் கூலிப்படைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கூலிப்படைகளுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் இருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தயங்குகின்றனர்.
குற்ற வழக்குகளில் அரசியல்வாதிகள் தலையிடுவதால் காவலர்கள் முறையாக விசாரணை செய்வதில்லை. இது ரௌடிகளுக்கு சாதகமாக இருப்பதால் அவர்கள் துப்பாக்கிகளுடன் குற்ற சம்பவத்தில் ஈடுபடுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள 1,324 காவல் நிலையங்களுக்கும் ஒரே ஒரு கட்டுப்பாட்டு அறை சென்னையில் மட்டும் உள்ளது. அவசர உதவி எண் 100-க்கு அழைத்தால் சென்னையிலுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தான் அழைப்பு செல்கிறது. கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிபவர்களுக்கு தமிழகத்தில் அனைத்து பகுதிகளும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவசரத்துக்கு எண் 100-ஐ அழைக்கும் போது சென்னைக்கு சென்று மீண்டும் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்துக்கு தகவல் செல்வதால் காவலர்கள் சம்பவ இடத்துக்கு செல்ல மூன்று மணிநேரம் ஆகிறது. இதனால் குற்ற சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் எளிதாக தப்பி செல்கின்றனர்.
 எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நவீனமயமாக்கப்பட்ட காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்க வேண்டும். காவல் நிலையங்களின் எல்லைகள் தொடங்கும், முடியும் இடங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளில் காவல் நிலையங்களின் தொடர்பு எண்களை எழுதி வைக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
 இந்த மனு, நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் காவலர்கள் கூடுதல் பணிச்சுமையுடன் பணிபுரிகின்றனர். இதனால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். விசேஷம், பண்டிகை போன்ற நேரங்களில் நாம் வீட்டில் இருக்கும்போது, அவர்கள் பணிபுரிகின்றனர். இதனால் அவர்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக இருப்பதில்லை. 
தமிழகத்தில் மக்கள்தொகைக்கு ஏற்ப காவலர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா? தொடர் பணிச்சுமையால் தமிழகத்தில் ஆண்டுக்கு ஆயிரம் காவலர்கள் பணியில் இருந்து விலகுகின்றனர். 200 காவலர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் எனக் கூறிய நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com