புதிய கண்டுபிடிப்புகளை கல்வி நிலையங்கள் ஊக்குவிக்க வேண்டும்: பிரணாப் வலியுறுத்தல்

இளைஞர்களின் அறிவியல் - தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் நோக்கில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்தும்
கல்விக் கருத்தரங்கு தொடக்கவிழாவில் பங்கேற்ற  குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நினைவுப் பரிசு வழங்கும் நாளிதழின் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா. 
கல்விக் கருத்தரங்கு தொடக்கவிழாவில் பங்கேற்ற  குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நினைவுப் பரிசு வழங்கும் நாளிதழின் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா. 


இளைஞர்களின் அறிவியல் - தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் நோக்கில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளை பள்ளி, கல்லூரிகளில் மேற்கொள்ள வேண்டும் என்று  குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.
எழுத்தறிவில் இந்தியா முன்னேறியிருப்பது உண்மை என்றாலும், சமூகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினருக்கும் கல்வி வசதிகள் சென்றடைந்திருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் இரண்டு நாள் கல்விக் கருத்தரங்கு சென்னையில் புதன்கிழமை தொடங்கியது. கருத்தரங்கை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா முன்னிலை வகித்தார். முதல் நாள் நிகழ்வில் சமகால கல்வி முறைகள் தொடர்பான பல்வேறு தலைப்புகளின் கீழ் சிறப்பு அமர்வுகள் நடைபெற்றன.
அதில் கல்வியாளர்களும், பிரபலங்களும், பொருளாதார நிபுணர்களும் பங்கேற்று உரையாற்றினர். முன்னதாக கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரணாப் முகர்ஜி, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய தேசத்துக்கான கல்வியை வடிவமைத்தல் என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியாவின் கல்வி முறை தொடர்பான விவாதங்களுக்கும், புதிய சிந்தனைகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பது மிகச் சில ஊடகங்கள் மட்டுமே. அந்த வரிசையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் ஆண்டுதோறும் இத்தகைய கல்விக் கருத்தரங்கை நடத்தி வருவது சிறப்புக்குரிய நிகழ்வு.
இந்திய தேசம் பன்முகத்தன்மையும், பல்வேறு கலாசார மரபுகளும் கொண்டது. 50 ஆண்டுகளுக்கும் மேல் பொது வாழ்வில் இருந்த எனக்கு, இந்தியா குறித்த சில உண்மைகளை அனுபவப்பூர்வமாக உணர முடிந்தது. வேற்றுமையில் ஒற்றுமையும், சகிப்புத்தன்மையும்தான் நம் நாட்டின் ஆன்மாவாக விளங்குகின்றன. இந்தியா ஒற்றை மொழியைக் கொண்ட நாடு அல்ல; ஒரு மதத்தை மட்டும் வழிபடும் நாடு அல்ல. மாறாக, பலதரப்பட்ட மக்களும் நல்லிணக்கத்துடன் வாழும் நாடாக விளங்கி வருகிறது.
அதுமட்டும் நமது சிறப்பு அல்ல. மதச்சார்பின்மைக்கும், மாற்றுக் கருத்துக்கும் மதிப்பளிக்கும் மாண்பும் நம்முள்ளே இரண்டறக் கலந்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே நாட்டின் கல்வியறிவு மேம்பட்டு வருகிறது. 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் எழுத்தறிவு வளர்ச்சி விகிதம் 8.6 சதவீதம் உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
ஒருபுறம் இது பெருமைக்குரிய விஷயம்தான் என்றாலும், மற்றொரு புறம் நாம் மனசாட்சியுடன் ஒரு கேள்விக்குப் பதிலளிக்க வேண்டும். இந்த வளர்ச்சி விகிதம் அனைவரையும் உள்ளடக்கியதுதானா? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.
ஜாதி, மத, மொழி, இன பேதமின்றி அனைவரையும் ஒருசேர ஏற்றுக் கொள்வது என்பது இந்தியாவின் பன்னெடுங்கால பாரம்பரியம். இதிகாசங்களிலும், புராணங்களிலும் காட்டப்பட்டுள்ள போதனைகளும் அதையே வலியுறுத்துகின்றன. அனைவரையும் உள்ளடக்கி ஒரு விஷயத்தை முன்னெடுப்பது என்பது கடமை மட்டுமல்ல; நமது தருமமும், தலையாய வினையும் கூட.
உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்டிருக்கும் தேசமாக இந்தியா உருவெடுத்து வருகிறது. 
ஆனால், எதிர்கால இந்தியாவை வடிவமைக்கும் அவர்களுக்கு முறையான கல்வியைக் கொடுக்கிறோமா? என்பது சந்தேகமே. ஆரம்பக் கல்வியே கிடைக்கப் பெறாத மக்களுக்கு எழுத்தறிவை ஏற்படுத்தித் தருகிறோமா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றார் அவர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: கருத்தரங்கை தொடங்கி வைத்து  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசுகையில், உலகமயமாக்கலினால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதற்கு இளைஞர்களை தயார்படுத்தும் வகையில் சமகாலக் கல்வி முறை இருக்க வேண்டும் என்று  வலியுறுத்தினார்.
மேலும், சமூகத்தில் சகிப்புத்தன்மையையும், பன்முகத்தன்மை பற்றிய புரிதலையும் மேம்படுத்துவதில் அளப்பரிய பங்கு கல்விக்கு உண்டு என்றும் அவர் கூறினார்.
 அன்புமணி ராமதாஸ்: இந்தியாவின் வளர்ச்சிக்கு எவ்வித கல்வி அவசியம் என்ற தலைப்பில் அமர்வில் மக்களவை உறுப்பினர்  அன்புமணி ராமதாஸ் பேசும்போது,  
பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். 
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பேசும்போது, சமூகத்தில் போலி மதச்சார்பின்மை பேசி வருபவர்களுக்கு கடிவாளமிட வேண்டும் என்று  வலியுறுத்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com