புதுவை முதல்வர் நாராயணசாமி 2ஆவது நாளாக தர்னா! மு.க.ஸ்டாலின் ஆதரவு

புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடியைக் கண்டித்து, ஆளுநர் மாளிகை வாயிலில் முதல்வர் வே.நாராயணசாமி மேற்கொண்டு வரும் தர்னா போராட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். 
புதுவை முதல்வர் நாராயணசாமி 2ஆவது நாளாக தர்னா! மு.க.ஸ்டாலின் ஆதரவு

புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடியைக் கண்டித்து, ஆளுநர் மாளிகை வாயிலில் முதல்வர் வே.நாராயணசாமி மேற்கொண்டு வரும் தர்னா போராட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். 

புதுவையில் யாருக்கு கூடுதல் அதிகாரம் என்பதில் ஆளுநர் கிரண் பேடி- முதல்வர் நாராயணசாமி இடையே கடந்த 3 ஆண்டுகளாக பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில், கட்டாய தலைக்கவச சட்டத்தை அமல்படுத்த ஆளுநர் கிரண் பேடி,  டிஜிபி சுந்தரி நந்தாவிடம் உத்தரவிட்டார். தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையில் ஆளுநர் கிரண் பேடி தலையிட்டதாலும், தலைக்கவசம் அணியாமல் இரு வாகனங்களை ஓட்டியதாக, 3 நாள்களில் 30,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாலும், இதன்மூலம் வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக மக்களின் கவனம் திரும்பும் என முதல்வர் நாராயணசாமி கருதினார். கடந்த சில நாள்களாக வெளியூர் பயணங்களில் இருந்த அவர் புதன்கிழமை காலை சட்டப்பேரவைக்கு வந்தார். 

உடனடியாக அமைச்சர்களைப் பேரவைக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார். இக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆ.நமச்சிவாயம், மு.கந்தசாமி,  எப்.ஷாஜகான்,  மல்லாடி கிருஷ்ணாராவ், ஆர்.கமலக்கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர். தகவலறிந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் க.லட்சுமிநாராயணன்,  ஜெயமூர்த்தி,  எம்.என்.ஆர்.பாலன், விஜயவேணி,  தீப்பாய்ந்தான்,  திமுக எம்எல்ஏ  இரா.சிவா உள்ளிட்டோரும் சட்டப்பேரவைக்கு வந்தனர். தொடர்ந்து முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். பிற்பகல் ஒரு மணி வரை ஆலோசனை நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு முதல்வர் நாராயணசாமி கருப்புச் சட்டை, வேட்டி அணிந்தார். அமைச்சர்கள் சிலரும் கருப்புச் சட்டைக்கு மாறினர். எம்எல்ஏக்கள் கருப்புத் துண்டு அணிந்தனர். பின்னர், பேரணியாக ஆளுநர் மாளிகைக்குக் சென்ற அவர்கள், வாயிலில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு திரண்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், அவர்கள் ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். 

வெயில் காரணமாக முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆளுநர் மாளிகை வாயில் பகுதியிலிருந்து சற்று முன்பாக அமர்ந்து தர்னாவை தொடர்ந்தனர். மதிய உணவை சாலையிலேயே அமர்ந்து சாப்பிட்டு விட்டு, போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனிடையே, ஆளுநர் மாளிகை அருகே பாரதி பூங்காவில் கூடியிருந்த காங்கிரஸ் தொண்டர்கள், ஆளுநர் மாளிகை நோக்கி வந்தபோது போலீஸார் அப்புறப்படுத்தினர். அதேவேளையில் முதுநிலை எஸ்.பி. அபூர்வா குப்தா,  தர்னாவில் ஈடுபட்ட முதல்வர், அமைச்சர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், போராட்டத்துக்கான காரணத்தை முதல்வர் கூறியதும் அபூர்வா குப்தா அங்கிருந்து நகர்ந்தார்.  

இந்திய கம்யூனிஸ்ட் நாரா.கலைநாதன், மார்க்சிஸ்ட் ராஜாங்கம், முருகன், பெருமாள் ஆகியோரும் போராட்டத்தில் பங்கேற்றனர். காங்கிரஸ் தொண்டர்கள் ஆளுநர் கிரண் பேடியை வெளியேற வலியுறுத்தி அவரது உருவ பொம்மையை எரித்தனர். இதனிடையே, பேச்சுவார்த்தைக்கு வருமாறு முதல்வருக்கு ஆளுநர் கிரண் பேடி அழைப்பு விடுத்தார். கடந்த 7-ஆம் தேதி 39 கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கடிதம் கொடுத்தேன். அவை நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி பேச்சுவார்த்தைக்குச் செல்ல முதல்வர் நாராயணசாமி மறுத்துவிட்டார். தொடர்ந்து, ஆளுநர் மாளிகையைச் சுற்றி காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இரவு 10 மணி வரையிலும் முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் தர்னா தொடர்ந்தது. 

இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 2ஆவது நாளாக இன்றும் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். எங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் தங்களுடைய போராட்டத்துக்கு பயந்துதான் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வெளியேறி உள்ளார் என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதனிடையே ஆளுநர் மாளிகைக்கு அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆளுநர் மாளிகை வாயிலில் தர்ணாவில் ஈடுபட்டு வரும் புதுவை முதல்வர் வே.நாராயணசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். முன்னதாக நாராயணசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்ட மு.க.ஸ்டாலின் தர்னா வெற்றிபெற தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com