விபத்தில் சிக்குவோருக்கு உதவி செய்தால் காவல் துறை தொந்தரவு செய்யாது: போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையர் உறுதி

சாலை விபத்துகளில் சிக்குவோருக்கு பொதுமக்கள் தயக்கமின்றி உதவ வேண்டும் எனவும், அவ்வாறு உதவுபவர்களை போலீஸார் தொந்தரவு செய்யமாட்டார்கள் எனவும் சென்னை பெருநகர
விபத்தில் சிக்குவோருக்கு உதவி செய்தால் காவல் துறை தொந்தரவு செய்யாது: போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையர் உறுதி


சாலை விபத்துகளில் சிக்குவோருக்கு பொதுமக்கள் தயக்கமின்றி உதவ வேண்டும் எனவும், அவ்வாறு உதவுபவர்களை போலீஸார் தொந்தரவு செய்யமாட்டார்கள் எனவும் சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையர் ஏ.அருண் தெரிவித்துள்ளார்.

 இது குறித்து அருண், புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மக்கள் தொகை, வாகனப் பெருக்கத்தினால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. சாலை விபத்துகள் ஏற்படும்போது பலர் அருகே இருந்தாலும், போலீஸார் தங்களை வழக்குகளில் சேர்த்து தொந்தரவு செய்வார்கள் எனத் தவறாக கருதிக் கொண்டு விபத்துகள் பற்றிய தகவலை தெரிவிக்கவும், காயமடைந்தவர்களுக்கு உதவி செய்யவும் தயக்கம் காட்டுகிறார்கள். 
இதனால் விபத்துகளில் காயம்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. 

உதவி செய்கிறவர் பாதுகாக்கப்படுவார்: இது போன்று தவறான கருத்துகளை களையவும், விபத்து குறித்து தகவல் தருபவர்களையும், காயமடைந்தவர்களுக்கு உதவி செய்பவர்களையும் எவ்வித சிரமத்துக்கும் உள்படுத்தாமல் பாதுகாக்கவும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளின் படி, சாலை விபத்து ஏற்படும்போது அருகே இருப்பவர் அல்லது காயமடைந்தவர்களுக்கு உதவி செய்கிறவர் பாதுகாக்கப்படுவார்.

 முக்கியமாக, விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவி செய்கிறவர், அருகே உள்ள மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவரை சேர்த்துவிட்டு சென்றுவிடலாம், அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கப்படாது. விபத்தை நேரில் பார்த்தவர் முகவரியை மட்டும் தெரிவிக்கலாம்.

 மேலும் சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்க மறுத்தால், சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.  காயமடைந்த நபருக்கு உதவி செய்கிறவர்கள்,  தங்களது பெயர், தனிப்பட்ட தகவல்களை மருத்துவமனையில் தெரிவிப்பது, சம்பந்தப்பட்ட நபரின் விருப்பமாகும்.

கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை: உதவி செய்கிறவர்கள், விபத்து தொடர்பான எவ்வித சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கும் பொறுப்பாக மாட்டார்கள். 

சாலை விபத்துகள் குறித்த தகவல்களை காவல் துறை அல்லது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும் நபர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களை தெரிவிப்பது கட்டாயமில்லை. 

அவர்களிடம் தனிப்பட்ட தகவல்களை கேட்டு கட்டாயப் படுத்தினால், சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்  மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல போலீஸார், விபத்து குறித்து விசாரணையின்போது உதவி செய்யும் நபர்களை சாட்சியாக இருக்கும்படி வலியுறுத்த மாட்டார்கள். விபத்து வழக்கில் சாட்சியாய் இருப்பது சம்பந்தப்பட்ட நபரின் விருப்பம்.

 விபத்து குறித்து விசாரணை செய்யும் போலீஸார், உதவி செய்த நபரை தேவையில்லாமல் காத்திருக்கும்படி நிர்பந்திக்க மாட்டார்கள்.
தயக்கமின்றி உதவுங்கள்: விபத்து வழக்குகளில் தாமாக முன்வந்து சாட்சியாக இருக்க சம்மதிக்கும் நபர்களை போலீஸார், காவல் நிலையத்துக்கு வரும்படி கட்டாயப்படுத்த மாட்டார்கள். மாறாக சம்பந்தப்பட்ட நபரின் வீட்டுக்கோ அல்லது அந்த நபர் விரும்பும் இடத்துக்கோ போலீஸார் சாதாரண உடையில் ஒரு முறை மட்டுமே சென்று விசாரணை செய்வர். இதில் விடியோ கான்பரன்சிங் முறையும் பயன்படுத்தப்படும்.

 எனவே, பொதுமக்கள் சாலை விபத்துகள் குறித்தத் தகவல்களை காவல் துறைக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, எவ்வித தயக்கமுமின்றி உதவ வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com