ஒசூர்-நாகர்கோவில் மாநகராட்சி உள்பட 9 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறின

ஒசூர், நாகர்கோவில் ஆகியவற்றை மாநகராட்சியாக்கும் சட்ட மசோதாக்கள் உள்பட ஒன்பது மசோதாக்கள் பேரவையில்


ஒசூர், நாகர்கோவில் ஆகியவற்றை மாநகராட்சியாக்கும் சட்ட மசோதாக்கள் உள்பட ஒன்பது மசோதாக்கள் பேரவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களில் ஒரு சில மசோதாக்களை பிரதான எதிர்க்கட்சியான திமுக எதிர்த்தது.
சட்டப் பேரவையில் கடந்த இரண்டு நாள்களாக (புதன், வியாழக்கிழமை) மொத்தம் 9 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், நிதி தொடர்பான இரண்டு மசோதாக்கள் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டன.
மேலும்,  ஒசூர், நாகர்கோவில் நகராட்சிகளை, மாநகராட்சிகளாக தரம் உயர்த்தும் மசோதா, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளை பயன்படுத்தினால் அபராதத் தொகையை அதிகரிக்க வகை செய்யும் மசோதாக்கள் (நகராட்சி-மாநகராட்சி மற்றும் பேரூராட்சி) என மொத்தம் நான்கு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தனியார் பல்கலை. சட்டம்: தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்க வசதியாக அறக்கட்டளைகள் அமைப்பதற்கு ஏதுவான சட்ட மசோதாவும் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு திமுக சார்பில் அந்தக் கட்சியின் உறுப்பினர் ரகுபதி எதிர்ப்பு தெரிவித்தார்.
தனியார் பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக் குழுவின் 2003-ஆம் ஆண்டு வரன்முறைகளைக் கொண்டே உருவாக்கப்பட வேண்டுமெனவும், இல்லாவிட்டால் அதில் படிக்கும் மாணவர்களின் படிப்புகள் சட்டப்பூர்வமானதாக இருக்காது எனவும் அவர் பேசினார். இதனால், மாணவர்களின் எதிர்காலம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார்.
இதற்கு மறுப்புத் தெரிவித்த உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தனியார் பல்கலைக்கழகங்கள் உரிய பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைமுறைகளுக்கு உட்பட்டே அமைக்கப்படுவதாகவும், தவறிழைக்கும் பல்கலைக்கழகங்கள் மீதும் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்க மசோதாவில் வழிவகைகள் இருப்பதாகவும் அவர் பதிலளித்தார்.
இதேபோன்று, வேளாண் விளை பொருள் விற்பனை  (ஒழுங்குபடுத்துதல்) இரண்டாம் திருத்தச் சட்ட மசோதாவும், தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்தப் பண்ணைத் தொழில் மற்றும் சேவைகள் சட்ட மசோதாவையும் வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு தாக்கல் செய்தார். 
இதில், வேளாண் விளை பொருள் மற்றும் கால்நடை ஒப்பந்தப் பண்ணை தொழில் சார்ந்த சட்ட மசோதாவுக்கு திமுக சார்பில் அந்தக் கட்சியின் துணை கொறடா பிச்சாண்டி அதிருப்தி தெரிவித்தார். அதற்கு அமைச்சர் துரைக்கண்ணு பதிலளித்தார். இந்த ஒன்பது சட்ட மசோதாக்களும் சட்டப் பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலமாக 
நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com