தமிழகத்தில் முதல்முறையாக நெல்லையில் ரூ.10-க்கு நிறைகொழுப்பு ஆவின் பால் அறிமுகம்

தமிழகத்தில் முதல்முறையாக திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்ட ஆவின் மூலம் ரூ.10-க்கு நிறைகொழுப்பு ஆவின் பால் வியாழக்கிழமை
ஆவின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரூ.10-க்கான பால் பாக்கெட்டுகள்.
ஆவின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரூ.10-க்கான பால் பாக்கெட்டுகள்.


தமிழகத்தில் முதல்முறையாக திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்ட ஆவின் மூலம் ரூ.10-க்கு நிறைகொழுப்பு ஆவின் பால் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இதேபோல உணவு விடுதிகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஹோட்டல் ஸ்பெஷல் வகை பாலின் விற்பனையும் தொடங்கிவைக்கப்பட்டது.
திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் உள்ள ஆவின் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய ரக ஆவின் பாலை அறிமுகம் செய்து ஆவின் தலைவர் என். சின்னத்துரை பேசியது: தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணையின்படி, தமிழகத்தில் இரண்டாவது வெண்மைப் புரட்சி ஏற்படுத்தும் வகையில் ஆவின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்ட ஆவின் நிறுவனம் பால் கொள்முதலை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தினமும் ஒரு லட்சம் லிட்டர் கொள்முதல் என்ற இலக்கை எட்டும் வகையில் ஏழைப் பெண்களுக்கு கடனுதவியுடன் கறவைமாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்தொடர்ச்சியாக, தமிழகத்திலேயே முதல் முறையாக ஏழை, எளிய மக்களின் வாங்கும் திறனை கருத்தில்கொண்டு ரூ.10-க்கு நிறைகொழுப்பு ஆவின் பால் (200 மி.லி.) வகையை அறிமுகம் செய்துள்ளோம். இதன்மூலம் அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் எளிதில் ஆவின் பாலை பெற்று பயன்பெற முடியும். தனியார் நிறுவனங்களைக் காட்டிலும் மிகக்குறைந்த விலைக்கு பாலை விநியோகிக்கும் வகையில் இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதுதவிர, ஹோட்டல் ஸ்பெஷல் என்ற சத்து மிகுந்த அடர்த்தியான ஆவின் பால் வகையும் அறிமுகம் செய்துள்ளோம். இதன்மூலம் வியாபாரிகள் பயனடைவார்கள். டீ கடை மற்றும் உணவுவிடுதி உரிமையாளர்கள் தங்களுக்குத் தேவையான அடர்த்தியான ஆவின் பாலை அந்தந்தப் பகுதி ஆவின் முகவர்கள் மூலமாகவோ அல்லது ஆவின் நிறுவனத்தில் நேரடி முகவராகியோ பெற்றுக் கொள்ளலாம். திருமணம் போன்ற இதர சுபநிகழ்ச்சிகளுக்குத் தேவையான பாலை பாக்கெட்டுகள் இல்லாமல் கேன்களில் அடைத்து விநியோகம் செய்யவும் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
ஆவின் மூலம் அனைத்து வயதினரின் உடல்நிலைக்கேற்ப நல்ல தரமான, சுகாதாரமான பால் மற்றும் பால் பொருள்களை மிகக் குறைந்த விலையில் தயாரித்து வழங்கி வருகிறோம். ஆவின் முகவர்களின் கோரிக்கையை ஏற்று தேவையான குளிர்பதனப் பெட்டிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீரிழிவுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான இனிப்பு இல்லாத பால்கோவா தேவை அடிப்படையில் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சுகாதாரமான தயிரை பாக்கெட்டுகளில் அடைத்து 100 மில்லி ரூ. 10-க்கும், 200 மில்லி ரூ. 18-க்கும் விநியோகம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சங்கரன்கோவிலில் நடைபெற உள்ள விழாவில் 1000 பேருக்கு கறவைப் பசுக்கள்  வழங்கப்பட உள்ளன. இவ்விழாவில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com