புதுச்சேரியில் 3-ஆவது நாளாக முதல்வர் நாராயணசாமி தர்னா போராட்டம்

கிரண் பேடியைக் கண்டித்து, முதல்வர் வே.நாராயணசாமி 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டத்தைத் தொடர்ந்தார்.
புதுவை ஆளுநர் மாளிகை முன் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை போராட்டத்தை தொடர்ந்த முதல்வர் வே.நாராயணசாமி.  உடன் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள்.
புதுவை ஆளுநர் மாளிகை முன் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை போராட்டத்தை தொடர்ந்த முதல்வர் வே.நாராயணசாமி.  உடன் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள்.


புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியைக் கண்டித்து, முதல்வர் வே.நாராயணசாமி 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டத்தைத் தொடர்ந்தார்.

துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு கடந்த பிப்.7-ஆம் தேதி தாம் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள 39 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி ஆளுநர் மாளிகை முன் முதல்வர் நாராயணசாமி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுடன் புதன்கிழமை பிற்பகல் முதல் தர்னாவில் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஆளுநர் கிரண் பேடி விடுத்த அழைப்பையும் முதல்வர் நாராயணசாமி நிராகரித்தார்.

அன்றிரவு முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் சாலையிலேயே விரிப்புகளை விரித்து தூங்கினர். வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் முதல்வர் நாராயணசாமி எழுந்து சட்டப்பேரவை வளாகத்துக்குச் சென்று குளித்துவிட்டு வந்து மீண்டும் போராட்டத்தைத் தொடர்ந்தார்.

 ஆளுநர் கிரண் பேடி வியாழக்கிழமை சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டியிருந்தது. இதனால், அவரது பாதுகாப்புக்காக துணை ராணுவப் படை வரவழைக்கப்பட்டு, ஆளுநர் மாளிகையின் பாதுகாப்பு அந்தப் படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, ஆளுநர் கிரண் பேடி தனது காரில் ஏறி வெளியே சென்று விட்டார்.  பிப்.20-ஆம் தேதிக்குப் பிறகே கிரண் பேடி புதுச்சேரி திரும்புவார் எனத் தெரிகிறது. 

பாதுகாப்புடன் ஆளுநர் மாளிகையை விட்டு கிரண்பேட்டி வெளியேறி உள்ள நிலையில், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை, முற்றுகை போராட்டம் தொடரும் என்று முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் 3-ஆவது நாளாக தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிரண்பேடியால் மாநிலத்தின் வளர்ச்சி தடைபடுவதுடன் திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டிள்ளார். 

ஆளும் கட்சியினரின் போராட்டத்துக்கு திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சியினர் பங்கேற்று ஆதரவு தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், வரும் 20 ஆம் தேதி புதுச்சேரி திரும்பும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, 21 ஆம் தேதி முதல்வர் நாராயணசாமியுடன் பேச்சு நடத்தத் தயார் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com