விவசாயிகளின் கடனை ரத்து செய்யக்கோரி வங்கிகள் முன் போராட்டம்: காங்கிரஸ்

விவசாயிகளின் வங்கிக் கடனை ரத்து செய்யக்கோரி வங்கிகள் முன் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விவசாயிகளின் கடனை ரத்து செய்யக்கோரி வங்கிகள் முன் போராட்டம்: காங்கிரஸ்


விவசாயிகளின் வங்கிக் கடனை ரத்து செய்யக்கோரி வங்கிகள் முன் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய் தத், முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன்,  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு,  கிருஷ்ணசாமி,  திருநாவுக்கரசர், செயல்தலைவர்கள் வசந்தகுமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம், மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
 ஒரு தொகுதியில்கூட பாஜகவால் வெற்றிபெற முடியாத மாநிலமாக தமிழகம் இருக்கிறது. அந்த அளவுக்கு திமுக - காங்கிரஸ் தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி வலுப்பெற்று உள்ளது. 
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற உழைப்போம். சிறுகுறு விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடன்கள் இந்தியா முழுவதும் ஏறத்தாழ ரூ.2 லட்சம் கோடி இருக்கும். இதைத் தள்ளுபடி செய்ய பாஜக அரசு முன் வரவில்லை. அதே சமயம், தனியார் நிறுவனங்கள் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய ரூ.2.43 லட்சம் கோடியை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. தமிழக அரசு விவசாயிகளின் கூட்டுறவு கடன்களைத் தள்ளுபடி செய்ய மறுத்து வருகிறது. இதனைக் கண்டித்தும், விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யவும் வலியுறுத்தியும் தமிழகத்தில் உள்ள அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் முன்பும் கருப்புக் கொடியேந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com