குடிமராமத்து முதல் பொங்கல் பரிசு வரை...மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வர் பழனிசாமி அரசு

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு இரண்டு ஆண்டுகளைக் கடந்து இப்போது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி.
ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி.


முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு இரண்டு ஆண்டுகளைக் கடந்து இப்போது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிப். 16-இல் அவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். 
பல்வேறு நலத் திட்டங்கள்: முதல்வராகப் பதவியேற்றதும், விவசாயிகளின் நலன்களைக் காக்கும் வகையிலான திட்டங்களுக்கே முதல்வர் பழனிசாமி முன்னுரிமை அளித்தார். அதன்படி, குடிமராமத்துப் பணிகள் திட்டத்தை அவர் துவக்கி வைத்தார்.
தமிழகத்தின் 30 மாவட்டங்களில் கடந்த இரண்டு நிதியாண்டுகளில் மட்டும் ரூ.428.44 கோடி மதிப்பீட்டில் 3 ஆயிரத்து 24 குடிமராமத்துப் பணிகளுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. அந்தப் பணிகளில் இதுவரை ஆயிரத்து 19 பணிகள் முடிவடைந்துள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ், ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. ஏரிகள், கால்வாய்கள், நீர்த்தேக்கங்களில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள், பொது மக்களுக்கு விலையில்லாமல் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் நீங்கலாக, பிற மாவட்டங்களின் ஏரிகள், கால்வாய்கள், அணைகளில் இருந்து எடுக்கப்படும் வண்டல், களிமண்ணின் அளவு விவசாயிகளின்  பயன்பாட்டுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
பெண்கள்-பொது மக்கள்: விவசாயிகளின் நலன்களைக் காக்க குடிமராமத்து போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், நகர்ப்புறங்களில் பணிக்குச் செல்லும் பெண்களின் இன்னல்களைத் தீர்க்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, பணிக்குச் செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தில் முதலில் பயனாளியே பணத்தைச் செலுத்தி பிறகு மானியத் தொகையை பெற்றுக் கொள்ளும் நிலை இருந்தது. இப்போது அது மாற்றப்பட்டு, முதலில் மானியத் தொகை அரசு சார்பில் அளிக்கப்பட்டு அதில் இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு பிறகு மீதமுள்ள தொகையை பயனாளிகள் தவணைத் தொகையில் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற மக்கள் நலத் திட்டங்கள் முதலில் செயல்படுத்தப்படும் போது, அதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களும் கண்டறியப்பட்டு உடனுக்குடன் தீர்க்கப்பட்டு வருகின்றன. இதுவரை, சுமார் ஒரு லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசும், சிறப்பு நிதியுதவியும்...ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழக அரசின் சார்பில்  அரிசி,  சர்க்கரை, வெல்லம், கரும்பு என பண்டிகையைக் கொண்டாட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு குடும்ப அட்டைதாரர்கள் மகிழும் வகையில், அட்டைக்கு ஆயிரம் ரூபாய் வீதம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். அந்த உத்தரவுப்படி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் அளிக்கப்பட்டது.
பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கிய ஒரு மாதத்துக்குள் தமிழக அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, கஜா புயல் பாதிப்பு, வறட்சியால் நிலைகுலைந்துள்ள தொழிலாளர்கள் சுமார் 60 லட்சம் பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் அளிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பிப்ரவரி மாத இறுதிக்குள்ளாக செயல்படுத்தப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
பொது மக்களுக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்து தொழில் தொடங்க வரும் முதலீட்டாளர்களுக்கும் உற்ற தோழனாக தமிழக அரசு விளங்கி வருகிறது.
முதலீட்டாளர் மாநாடுகள்: தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த 1993-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக் காலத்தில் தொழில் கொள்கை வெளியிடப்பட்டது. இந்தத் தொழில் கொள்கையே போர்டு போன்ற மிகப்பெரிய கார் கம்பெனிகளும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் சென்னை மற்றும் இதர பகுதிகளை நோக்கி படையெடுக்கக் காரணமாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து, பல்வேறு தொழில் கொள்கைகள் வெளியிடப்பட்டாலும், முதலீட்டாளர்களுடன் நேரடியாகச் சந்தித்து தமிழகத்தின் சிறப்புகளை விளக்குவதற்கான மாநாடுகள் 2015-ஆம் ஆண்டுக்கு முன்பு அமையப் பெறவில்லை. இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பரில் முதல் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் வழியாக ரூ.2.41 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இந்த மாநாட்டில் பேசிய ஜெயலலிதா, தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும் என்றார்.
அவரது அறிவிப்பின்படியே, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாடு கடந்த ஜனவரியில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் மூலமாக, சுமார் ரூ. 3 லட்சத்து 431 கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக 10.45 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளன.
பிளாஸ்டிக் தடை: தொழிற்சாலைகள் அதிகளவு பெருகினாலும், அதனால் மாசுகள் ஏற்படாமல் சுற்றுச்சூழலை பேணிக் காப்பதிலும் தமிழக அரசு முன்னிலை வகிக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக ஆறுகளிலும், ஓடைகளின் நீரோட்டத்துக்கும் மிகப்பெரிய சவாலாக அமைந்தது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்குகள்தான்.
இந்த பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்வதற்கு முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு அதிரடியாக முடிவெடுத்தது. அதன்படியே, கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கு பொது மக்கள் மிகப்பெரிய ஒத்துழைப்பை அளித்து வருகிறார்கள். வணிகர்களும் மனமுவந்து இதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். இதுபோன்று, அனைத்துத் தரப்பினரும் மனங்கவரும் வகையிலான திட்டங்களையும், அறிவிப்புகளையும் செயல்படுத்தி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com