மொழியால் மட்டுமே பண்பாட்டைக் காக்க முடியும்!: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்

மொழியால் மட்டுமே கலாசாரத் தொன்மையையும், கலைகளையும் காக்க முடியும் என்று தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தெரிவித்தார்.
மொழியால் மட்டுமே பண்பாட்டைக் காக்க முடியும்!: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்


மொழியால் மட்டுமே கலாசாரத் தொன்மையையும், கலைகளையும் காக்க முடியும் என்று தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தெரிவித்தார்.
ஆர்.ஆர். சபா ஆர்ட்ஸ் அகாதெமி சார்பில் தமிழிசைச் சாரல் இரண்டாமாண்டு இசை விழா சென்னை மயிலாப்பூர் சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ரசிக ரஞ்சனி சபாவில் (ஆர்.ஆர்.சபா) வெள்ளிக்கிழமை தொடங்கியது.  விழாவை தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தொடங்கி வைத்துப் பேசியது: 
 ரசிக ரஞ்சனி சபா இந்தளவுக்கு பிரம்மாண்டமாக  உருவாகும் என யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க முடியாது.  அப்படியொரு பிரம்மாண்ட அரங்கத்தை மயிலாப்பூரில் கட்டி எழுப்பிய ஆர்.ஆர்.சபா நிர்வாகத்தினருக்கு இசை உலகமும்,  தமிழுலகமும் சிரம் தாழ்த்தி பாராட்டவும்,  வணங்கவும் கடமைப்பட்டிருக்கின்றன.  
தமிழ்,  சமயம்,  இசை ஆகிய மூன்றையும் பாதுகாக்கும் வகையில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதுதான் இந்த ஆர்.ஆர். சபா ஆர்ட்ஸ் அகாதெமி சமுதாயத்துக்குச் செய்யும் மிகப்பெரிய தொண்டு. இந்தத் தமிழிசைச் சாரல் என்ற நிகழ்ச்சியைப் பார்த்து தமிழகத்தில் எல்லா நகரங்கள்,  ஊர்களில் உள்ள அமைப்புகள் இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதன் மூலம் தமிழ், சமயம், இசை ஆகியவற்றைக் காப்பாற்ற வேண்டும். 
இசை,  தமிழ்,  சமயம் குறித்த புரிதல் என்பது இந்தியாவுக்கு, அதிலும் குறிப்பாக தமிழகத்துக்கு  மட்டுமே உரித்தான தனிச் சிறப்பாகும்.  இந்த உலகில் பல நாடுகள், மொழிகள், சமயங்கள், இனங்கள்,  சமுதாயங்கள்,  இனக்குழுக்கள் இருக்கின்றன. ஆனால் அவர்களெல்லாம் நம்மைப் போன்று  இசை, சமயம்,  மொழி ஆகியவற்றை ஒருங்கிணைத்துச் செயல்படுவதில்லை.
 சமயத்தையும்,  இசையையும் சார்ந்திருப்பதால் தமிழ்மொழி வாழ்கிறது;  தமிழையும்,  இசையையும் சார்ந்திருப்பதால்தான் சமயம் வாழ்கிறது;  சமயத்தையும்,  தமிழையும் சார்ந்திருப்பதால்தான் இசை வாழ்கிறது.  இந்த மூன்றும் ஒன்றையொன்று பிரிக்க முடியாத அளவுக்கு பின்னிப் பிணைந்திருந்த காரணத்தால்தான் நூற்றாண்டுகளைக் கடந்து நாம் இன்னும் தமிழ்ப் பேசிக் கொண்டிருக்கிறோம்.  இன்னும் நாம் நமது சமயத்தையும், பண்பாட்டுக் கூறுகளையும் காப்பாற்றிக் கொண்டு வருகிறோம். நமது இசையும், கலைகளும் அழிந்துவிடாமல் இருக்கின்றன.
நமது மொழி மட்டுமல்ல, பண்பாடும், கலாசாரமும், கலைகளும்கூட அழிந்துவிடும் என்பதை நாம் உணர வேண்டும். கர்நாடக சங்கீதத்தையும்,  நமது மதம் சார்ந்த கலாசாரத்தையும் பாதுகாக்க வேண்டுமெனில் மொழியைக் காக்க வேண்டும். 
மொழி பேசாமல் வழக்கொழிந்து போகுமேயானால் அதனுடன் சேர்ந்து நாம் நமது இனத்தின் அடையாளமான பண்பாட்டையும் இழக்க நேரிடும் என்றார் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன். 
விழாவில், ஆர்.ஆர். சபா தலைவர் சந்தான கிருஷ்ணன்,  துணைத் தலைவர் அருணா ரங்கநாதன்,  செயலர் நாகராஜன்,   ரசிக ரஞ்சனி சபா நிகழ்ச்சி குழு உறுப்பினர் சந்திரிகா ராஜாராம்,  நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கோடிலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
இதைத்தொடர்ந்து காணாபத்யம்  தலைப்பில் பேராசிரியர் மா.வயித்திலிங்கன் உரை மற்றும் வித்யா கல்யாண ராமன் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com