30,000 பொறியியல் மாணவர்கள் வாழ்வில் விளையாடுவதா?: அண்ணா பல்கலைக்கு ராமதாஸ் கண்டனம் 

30000 பொறியியல் மாணவர்கள் வாழ்வில் விளையாடுவதா? தேர்வு முடிவுகளை உடனே வெளியிடுக என்று அண்ணா பல்கலைக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
30,000 பொறியியல் மாணவர்கள் வாழ்வில் விளையாடுவதா?: அண்ணா பல்கலைக்கு ராமதாஸ் கண்டனம் 

சென்னை: 30000 பொறியியல் மாணவர்கள் வாழ்வில் விளையாடுவதா? தேர்வு முடிவுகளை உடனே வெளியிடுக என்று அண்ணா பல்கலைக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள 150 பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பயிலும் 30 ஆயிரத்திற்கும் கூடுதலான மாணவர்களின் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. மாணவர்கள் எந்தத் தவறும் செய்யாத நிலையில், அவர்களைத் தண்டிக்கும் வகையில் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய கலந்தாய்வில் பங்கேற்று 2018-19 கல்வியாண்டில் முதலாம் ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர்ந்த மாணவர்களுக்கு முதலாம் பருவத்தேர்வு கடந்த நவம்பர் மற்றும் திசம்பர் மாதங்களில் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 509 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 90 ஆயிரத்திற்கும் கூடுதலான மாணவ, மாணவிகள் இந்த தேர்வில் பங்கேற்றனர். இந்தத் தேர்வுக்கான முடிவுகள் நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. 350-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பயிலும் 60 ஆயிரத்திற்கும் கூடுதலான மாணவர்களின் முடிவுகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், 150 கல்லூரிகளைச் சேர்ந்த 30 ஆயிரம்  மாணவர்களின் தேர்வு முடிவுகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

முதலாம் ஆண்டில் சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை சம்பந்தப்பட்ட  கல்லூரிகள் இன்னும் நிறைவு செய்யவில்லை என்றும், மாணவர்கள் நலன் சார்ந்த பணிகளுக்காக அண்ணா பல்கலைக்கழகத்திடம் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.1200 வீதம் செலுத்த வேண்டிய கட்டணத்தையும் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் கட்டவில்லை என்றும் கூறியுள்ள பல்கலைக்கழக நிர்வாகம், அதன் காரணமாகவே  தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டு உண்மையானதாக இருக்கலாம்; ஆனால், அதற்காக மாணவர்களின் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் நிறுத்தி வைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி, மாணவர்கள் நலனுக்கான கட்டணத்தை வசூலித்து அண்ணா பல்கலைக்கழகத்தில் செலுத்துவது ஆகியவை சம்பந்தப்பட்ட கல்லூரிகளும், தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகமும் இணைந்து செய்ய வேண்டிய பணியாகும். அவற்றை செய்யாதது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தவறு ஆகும். அதேபோல், மாணவர்கள் நலனுக்கான கட்டணம் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் ஏற்கனவே வசூலிக்கப்பட்டு விட்ட நிலையில், அதை செலுத்தாதது கல்லூரி நிர்வாகங்களின் தவறு ஆகும். அதற்காக தண்டிக்கப்பட வேண்டியவை சம்பந்தப்பட்ட கல்லூரிகளும், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகமும் தானே தவிர, மாணவர்கள் அல்ல. அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க தவறாகும்.

2016-ஆம் ஆண்டில் 30 பொறியியல் கல்லூரிகள் மாணவர்களிடமிருந்து வசூலித்த தேர்வுக்கட்டணத்தை  அண்ணா பல்கலைக்கழகத்தில் செலுத்தவில்லை என்பதற்காக அக்கல்லூரிகளில் பயின்ற 6 ஆயிரத்திற்கும்  கூடுதலான மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதனால், அவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்வது, பணிக்கு செல்வது ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன. அதேபோல், இப்போதும் முதலாமாண்டு மாணவர்களின் தேர்ச்சி முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர். அதனால், அவர்களால் இரண்டாம் பருவத்திற்கான பாடங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. இது அவர்களின் கல்வியை பாதிக்கக்கூடும்.

மாணவர்கள் செய்யாத தவறுக்கு அவர்களை தண்டிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. மாணவர்களின் சான்றிதழ்களை குறிப்பிட்ட கால வரையறைக்குள் தனியார் கல்லூரிகள் சரிபார்த்து வழங்காவிட்டால், அவற்றுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் நினைவூட்டல் கடிதங்களை அனுப்புவது பல்கலைக்கழகத்தின் பணியாகும். அதன்பிறகு சான்றிதழ்களை சரிபார்க்காத கல்லூரிகள் மீது பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்கலாம். அதை விடுத்து மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பது தவறான முன்னுதாரணமாகும்.

எனவே, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 150 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களின் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் உடனடியாக வெளியிட வேண்டும், இனி இத்தகைய தவறுகள் நடக்காமல் தடுக்கவும் அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com