சிறை வைக்கப்பட்டது சின்னத்தம்பி

சின்னத்தம்பி யானை வெள்ளிக்கிழமை பிடிக்கப்பட்டு டாப்சிலிப்-வரகளியாறு பகுதியில் மரக்கூண்டில் அடைக்கப்பட்டது. இதனால், சின்னத்தம்பி யானையின் 25 ஆண்டு கால சுதந்திர வாழ்க்கை பறிபோனது.
சிறை வைக்கப்பட்டது சின்னத்தம்பி

சின்னத்தம்பி யானை வெள்ளிக்கிழமை பிடிக்கப்பட்டு டாப்சிலிப்-வரகளியாறு பகுதியில் மரக்கூண்டில் அடைக்கப்பட்டது. இதனால், சின்னத்தம்பி யானையின் 25 ஆண்டு கால சுதந்திர வாழ்க்கை பறிபோனது.
 கோவை, தடாகம் பகுதியில் மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் உதவியுடன் கடந்த மாதம் 25-ஆம் தேதி பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி யானை டாப்சிலிப்-வரகளியாறு வனப் பகுதியில் விடப்பட்டது. ஒரு சில நாள்கள் மட்டுமே அப்பகுதியில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி அதற்குப் பிறகு இடம்பெயரத் தொடங்கியது. வனப் பகுதியை விட்டு வெளியேறிய யானை பிப்.1-ஆம் தேதி உடுமலை பகுதிக்கு வந்தது. தொடர்ந்து மடத்துக்குளம், கண்ணாடிப்புத்தூர் பகுதிகளில் உள்ள விவசாயத் தோட்டத்தில் தஞ்சமடைந்தது. யானையின் நடவடிக்கைகளை வனத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
 இந்நிலையில் இந்த யானையைப் பிடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, மயக்க ஊசி செலுத்தப்பட்டு கும்கி யானைகள் உதவியுடன் சின்னத்தம்பி வெள்ளிக்கிழமை பிடிக்கப்பட்டு லாரியில் வரகளியாறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் சின்னத்தம்பி யானை கூண்டுக்குள் அடைக்கப்பட்டது. கூண்டுக்குள் சென்றவுடன் எந்த ஆரவாரமும் இன்றி அமைதியாகவே இருந்தது. உடனே அதற்கு 50 மில்லி பி காம்ப்ளக்ஸ் எனப்படும் ஊட்டச்சத்து மருந்தும், 50 மில்லி ஆன்டிபயாடிக் மருந்தும் ஊசி மூலம் செலுத்தப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் அசோகன், கலைவாணன் ஆகியோர் அதற்கான பணியைச் செய்தனர்.
 அப்போது ஆனைமலை புலிகள் காப்பகத் தலைமை வனப் பாதுகாவலர் கணேசன், மாவட்ட வன அலுவலர்கள் மாரிமுத்து, கோவை வன அலுவலர், ஓய்வுபெற்ற வனச் சரக அலுவலரும், மனித-யானை மோதல்களைத் தடுக்கும் ஆலோசகருமான தங்கராஜ் பன்னீர்செல்வம், வனச் சரக அலுவலர் நவீன்குமார் உள்பட பலர் இருந்தனர். சின்னத்தம்பி யானை அடைக்கப்பட்டுள்ள கூண்டுப் பகுதியில் 5 யானைகள் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.
 டாப்சிலிப் வரகளியாறு பகுதியில் ஒரே நேரத்தில் நான்கு யானைகளை அடைத்து கட்டுப்படுத்தி பழக்கப்படுத்தும் வகையில் இரண்டு மரக்கூண்டுகள் (கரால்) உள்ளன. இதில் ஒரு கரால் 1956-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தக் கூண்டில் தற்போது வரை 150 யானைகள் அடைக்கப்பட்டு பழக்கப்படுத்தப்பட்டுள்ளன. 2001-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மற்றொரு கூண்டில் தான் தற்போது, சின்னத்தம்பியை அடைத்துள்ளனர். இந்தக் கூண்டுகள் தேக்கு மரத்தால் செய்யப்பட்டவை. ஒன்றரை மீட்டர் சுற்றளவு கொண்ட 13 பெரிய தூண்களும், 15 அடி அகலமும், 22 அடி உயரமும் கொண்டது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com