தேர்தலில் பண விநியோகத்தைத் தடுக்க கூடுதல் கண்காணிப்புக் குழு: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி

"வரும் மக்களவைத் தேர்தலில் பணம், பரிசுப் பொருள்கள் ஆகியவற்றின் விநியோகத்தைத் தடுக்க அதிக அளவில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும்' என்று
தேர்தலில் பண விநியோகத்தைத் தடுக்க கூடுதல் கண்காணிப்புக் குழு: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி

"வரும் மக்களவைத் தேர்தலில் பணம், பரிசுப் பொருள்கள் ஆகியவற்றின் விநியோகத்தைத் தடுக்க அதிக அளவில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும்' என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு தெரிவித்தார்.
 எதிர்வரும் மக்களவைத் தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
 இதில், மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள், தேர்தல் அலுவலர்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்துக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதசாகு தலைமை வகித்து, வேலூர் மாவட்டத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் முன்னேற்பாடுகள், மின்னணு வாக்கு இயந்திரங்கள், அலுவலர்களுக்கான பயிற்சிகள் உள்ளிட்டவை குறித்தும், தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
 இக்கூட்டத்தை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
 வரக்கூடிய தேர்தலை மிகச்சிறப்பாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடத்துவதற்குத் தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அலுவலர்களும் தேர்தலுக்கு தயார்நிலையில் உள்ளனர்.
 போதுமான மின்னணு இயந்திரங்களும், விவிபேட் இயந்திரங்களும் தயாராக உள்ளன. தேவைப்பட்டால் அவற்றைக் கூடுதலாகப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 தேர்தலின்போது பணம், பரிசுப் பொருள்கள் ஆகியவற்றின் விநியோகத்தைத் தடுப்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
 கடந்த முறை தேர்தலின்போது மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. தேர்தலில் பணம், பரிசுப் பொருள்கள் ஆகியவற்றின் விநியோகத்தை தடுக்க ஏராளமான குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். வாக்காளர் இறுதிப் பட்டியல் ஜனவரி 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
 வரும் 23, 24-ஆம் தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் இந்த முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
 இக்கூட்டத்தில், வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபன், சார்-ஆட்சியர் கே.மெஹராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com