நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை, எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை: ரஜினிகாந்த் அறிவிப்பு

சட்டப்பேரவைத் தேர்தல் தான் இலக்கு. எனவே வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியடப்போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். 
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை, எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை: ரஜினிகாந்த் அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதையடுத்து சட்டப்பேரவைத் தேர்தலில் கவனம் செலுத்தப்போவதாகவும் அப்போது அறிவித்திருந்தார். இதன்காரணமாக ரஜினிகாந்த் மக்கள் மன்றம் தொடர்பான நிர்வாகிகள் நியமனம் நடைபெற்று வந்தன. 

மேலும் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் நேரடி சந்திப்பை நடத்தினார். பின்னர் 90 சதவீத கட்சிப் பணிகள் முடிவடைந்துள்ளதாக கடந்த நவம்பர் மாதம் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள சூழலில் நடிகர் ரஜினிகாந்த், மாவட்ட செயலாளர்களுடன் சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீரென சந்தித்துப் பேசினார். அப்போது, வருகிற நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மன்ற நிர்வாகிகளின் செயல்பாடுகள், தேர்தலில் போட்டியிடுவது அல்லது ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, சட்டப்பேரவைத் தேர்தல் தான் இலக்கு. எனவே வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். மேலும் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த தேர்தலில் தனது பெயர், புகைப்படம், மக்கள் மன்றம் தொடர்பான எதையும் தவறாக பயன்படுத்தக் கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். 

தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை யார் தீர்ப்பார்கள் என நம்புகிறீர்களோ அவருக்கு வாக்களியுங்கள் என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார். அரசியல் கட்சிப் பணிகள் முழுவதும் நிறைவடைந்துவிட்டதாகவும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு அரசியல் கட்சி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்து, தேர்தல் பணிகளில் ரஜினிகாந்த் ஈடுபடப்போவதாகவும் போயஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com