பொருளாதாரக் குற்றங்களில் முதன்மையானது வரி ஏய்ப்பு

நாட்டில் நடைபெறும் பொருளாதாரக் குற்றங்களில் முதன்மையானதாக வரி ஏய்ப்பு இருப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார்.
பொருளாதாரக் குற்றங்களில் முதன்மையானது வரி ஏய்ப்பு

நாட்டில் நடைபெறும் பொருளாதாரக் குற்றங்களில் முதன்மையானதாக வரி ஏய்ப்பு இருப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார்.
 கோவையில் உள்ள தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாதெமியில் பொருளாதார குற்றங்கள் தொடர்பான இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு சனிக்கிழமை தொடங்கியது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.மணிகுமார் வரவேற்றார். கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் பி.ஹெச்.அரவிந்த் பாண்டியன், உயர் நீதிமன்ற நீதிபதி வினீத் கோத்தாரி ஆகியோர் சிறப்புரையாற்றினர். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே. தஹிலராமாணீ தலைமை உரையாற்றினார்.
 கருத்தரங்கைத் தொடங்கிவைத்து உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி பேசியதாவது:
 சமூக, பொருளாதாரக் குற்றங்கள் இன்றைய நவீன காலத்துக்கு ஏற்ப தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துள்ளன. கணினிகளைப் பயன்படுத்தி செய்யப்படும் மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமுதாயத்தில் அதிகாரம் கொண்டவர்கள்தான் பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தங்களை வழக்குகளில் இருந்து விடுவித்துக் கொள்ள அதிக பணம் செலவழித்து வழக்குரைஞர்களை நியமித்துக் கொள்கின்றனர்.
 நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதாகவும், நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும் கருப்புப் பணம் பதுக்கல், சட்டவிரோத பணப் பரிமாற்றம், வெளிநாட்டு பணப் பரிமாற்றம், சுங்க வரி, வருமான வரி உள்ளிட்ட பல்வேறு விதமான வரி ஏய்ப்புகள் சமூக, பொருளாதாரக் குற்றங்களில் அடங்கும்.
 பொருளாதாரக் குற்றங்கள் குறித்த தெளிவான வரையறை இதுவரை இல்லை. கடந்த 2014-இல் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட 24 வகையான பொருளாதாரக் குற்றங்களில் வரி ஏய்ப்புதான் முதன்மையான பொருளாதாரக் குற்றமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 இதைத் தவிர, கடத்தல், கடன் மோசடி, இன்சூரன்ஸ் பணம் மோசடி, சீட்டு மோசடி, கடன் அட்டை மோசடி, அடுத்தவரது வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடுதல், வெடிபொருள்கள் - ஆயுதங்கள் கடத்தல், அறிவுசார் சொத்துரிமை திருட்டு, பங்கு வர்த்தக மோசடி, உடல் பாகங்கள் கடத்தல், அதிக வட்டிக்குப் பணம் விடுதல், பழமையும் கலாசார முக்கியத்துவமும் வாய்ந்த பொருள்களைத் திருடுதல், ஒப்பந்தங்கள், உரிமங்கள் பெறுவதற்கு அரசு அதிகாரிகளைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்வது, அரசு இடங்களை ஆக்கிரமிப்பது போன்றவையும் சமூக, பொருளாதார குற்றங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
 இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்குத் தொழில்நுட்பம் உதவிகரமாக உள்ளது. எனவே இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களைத் தண்டிப்பதற்குத் தேவையான சாட்சிகள், மின்னணு ஆதாரங்களைத் திரட்டுவது மிகவும் முக்கியமானது. அதற்கு இதுபோன்ற கருத்தரங்குகள் உதவியாக இருக்கும் என்றார்.
 முன்னதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹிலராமாணீ பேசும்போது, சமூக, பொருளாதாரக் குற்றங்கள் மிகவும் அபாயகரமானவை. இதுபோன்ற குற்றங்கள் தனி மனிதர்களை மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கக் கூடியவை. பொருளாதாரக் குற்றவாளிகள் தொழில்நுட்பம் அறிந்தவர்களாக இருப்பதால், தொழில்நுட்பத்தின் அண்மைக் கால வளர்ச்சி, பயன்பாடு குறித்து நீதிபதிகள், நீதித்துறை அலுவலர்கள் தெரிந்து கொள்வது அவசியம் என்றார்.
 உயர் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சிவஞானம், நீதித் துறை அகாதெமியின் இயக்குநர் ஜி.சந்திரசேகரன், உயர் நீதிமன்றப் பதிவாளர் சி.குமரப்பன், தில்லி, கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் தொடக்க விழாவில் பங்கேற்றனர். கருத்தரங்கு இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com