ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை: தமிழக அரசு தகவல்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நியாயவிலைக் கடைகளில் கைரேகைப் பதிவுக்காக பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நியாயவிலைக் கடைகளில் கைரேகைப் பதிவுக்காக பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 சென்னை அபிராமபுரத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் கடந்த 2010-ஆம் ஆண்டு கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் தலைமையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, ரேஷன் பொருள்கள் விதிகளுக்கு முரணாக விற்பனைச் செய்யப்படுவதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து, அந்த நியாயவிலைக் கடையின் பணியாளர் கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
 இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கீதா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நியாயவிலைக் கடைகளில் கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) பொருத்துவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
 இதுதொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கோரிக்கையின்பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
 இந்நிலையில் வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கூட்டுறவுச் சங்கப் பதிவாளர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக்கடைகளில் முறைகேடுகளைத் தடுக்க அனைத்துப் பயனாளிகளுக்கும் ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது.
 நுகர்வோர் வாங்கும் பொருள்கள் தொடர்பான தகவல்களை அவர்கள் செல்லிடப்பேசியில் தெரிந்துகொள்ளும் வகையில் இணைப்புகள் தரப்பட்டுள்ளன. மேலும் 1,500 குடும்ப அட்டைகள் உள்ள 416 நியாய விலைக் கடைகளில் ரூ. 5.94 கோடி செலவில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. அதேபோல், கிடங்குகளில் இருந்து லாரிகளில் பொருள்கள் ஏற்றப்படுவதைக் கண்காணிக்க கிடங்குகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நியாய விலைக் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை முற்றிலுமாகத் தடுக்கும் வகையில், குடும்ப அட்டைதாரர்களின் கைரேகையைப் பதிவு செய்யும் வகையில் பயோமெட்ரிக் முறையை நடைமுறைப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
 இந்த பயோமெட்ரிக் முறையின்படி குடும்ப அட்டையில் உள்ள யாராவது ஒரு நபர் கைரேகையைப் பதிவு செய்தால் போதுமானது. இந்தத் திட்டம் தொடர்பான அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி இந்த அறிக்கை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக தமிழக உணவுப் பொருள், நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலர் வரும் மார்ச் 11-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com