அரசியல் லாபத்துக்காக சந்திக்க மறுக்கிறார் முதல்வர்

சுய நல அரசியல் லாபத்துக்காக தன்னைச் சந்திக்க புதுவை முதல்வர் நாராயணசாமி மறுப்பதாக துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டினார்.
அரசியல் லாபத்துக்காக சந்திக்க மறுக்கிறார் முதல்வர்

சுய நல அரசியல் லாபத்துக்காக தன்னைச் சந்திக்க புதுவை முதல்வர் நாராயணசாமி மறுப்பதாக துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டினார்.
 39 கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, தான் விதித்த 4 நிபந்தனைகள் ஏற்கப்படாததால் ஆளுநர் கிரண் பேடியுடனான சந்திப்பை புதுவை முதல்வர் நாராயணசாமி தவிர்த்துவிட்டார்.
 இதையடுத்து, முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் கிரண் பேடி ஞாயிற்றுக்கிழமை மாலை கடிதம் அனுப்பினார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
 ஆளுநர் மாளிகை முன் தாங்கள் (முதல்வர்) நடத்தி வரும் தர்னாவை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், கடந்த பிப். 7-ஆம் தேதி என்னிடம் அளித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கோரிக்கைகள் குறித்து விவாதிக்க ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு தங்களுக்கு அழைப்பு விடுத்து நேரம் ஒதுக்கியிருந்தேன்.
 பேச்சுவார்த்தை நடத்த எங்கு சந்திப்புக் கூட்டம் நடத்த வேண்டும், அதை எவ்வாறு நடத்த வேண்டும், யாரை அழைக்க வேண்டும், யாரை அழைக்கக்கூடாது போன்ற 4 நிபந்தனைகளை விதித்துள்ளீர்கள். நீங்கள் முன்வைத்த கோரிக்கைகளை கேட்கவே உங்களை அழைத்தேன். நீங்கள் எழுப்பியுள்ள கோரிக்கைகள் தொடர்பான கோப்புகள் ஆளுநர் மாளிகையில் இல்லை என்பதை நீங்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள்.
 இதை பார்க்கும்போது, சுயநல அரசியல் லாபத்துக்காக என்னை சந்திக்க மறுக்கிறீர்கள் என்பது தெரியவருகிறது. நமது சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றிருந்தால் உங்களது சந்தேகங்களுக்கு நான் முழுவிளக்கம் அளித்திருக்க முடியும்.
 பொதுமக்கள் முன்னிலையில் நாம் பங்கேற்கும் பொதுவிவாதம் தொடர்பான இடம், தேதி, நேரம் ஆகியவை குறித்தும் நிர்ணயம் செய்திருக்கலாம்.
 நீங்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கோரிக்கைகள் முழுவதையும் பொதுமக்களுக்கு தெரிவிக்காவிட்டால் எனது கடமையில் இருந்து நான் தவறியது போல ஆகிவிடும்.
 எனவே, இக்கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் விரைவில் தெரியப்படுத்தவுள்ளேன். இருப்பினும் என்னை சந்திக்க விரும்பினால் எனது அலுவலகத்தை நீங்கள் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார் ஆளுநர் கிரண் பேடி.
 இதனிடையே, முதல்வர் நாராயணசாமியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆகியோர் திங்கள்கிழமை புதுச்சேரிக்கு வர உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com