ஆறா, ஒன்பதா, பன்னிரண்டா, பதினாறா ?

அதிமுக, பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது என்கிற செய்தி கசிந்தது முதலே அரசியல் களத்தில் ஒருவித பரபரப்பு ஆரம்பித்து விட்டது
ஆறா, ஒன்பதா, பன்னிரண்டா, பதினாறா ?

அதிமுக, பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது என்கிற செய்தி கசிந்தது முதலே அரசியல் களத்தில் ஒருவித பரபரப்பு ஆரம்பித்து விட்டது. திமுகவும் சரி, அதிமுகவும் சரி தங்களது கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸுக்கோ, பாஜகவுக்கோ அளிக்கப்படும் மக்களவைத் தொகுதிகள் எதிரணிக்கு சாதகமாகிவிடும் என்கிற கண்ணோட்டத்துடன்தான் பார்க்கின்றன.
 கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கடுமையான பேரம் மேற்கொண்டு திமுகவை வற்புறுத்திப் பெற்ற பெரும்பாலான இடங்களில் தோல்வி அடைந்ததால்தான், 2016 தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. காங்கிரஸுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஒதுக்கிய 41 இடங்களில் வெறும் ஐந்து இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற முடிந்தது. இதனால், திமுக தொண்டர்கள் மத்தியில் காங்கிரஸ் மீது ஏற்பட்ட எரிச்சலும் ஆத்திரமும் இப்போதும்கூடத் தொடர்கிறது.
 காங்கிரஸ் நிச்சயமாக வெற்றி பெறும் வாய்ப்பு காணப்படும் ஒருசில தொகுதிகளை மட்டுமே கூட்டணித் தொகுதிப் பங்கீட்டில் அந்தக் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று திமுக தலைமையை மூத்த தலைவர்கள் பலர் வற்புறுத்தி வருகிறார்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் செய்த தவறை மீண்டும் செய்துவிடக் கூடாது என்பதுதான் அதற்குக் காரணம்.
 காங்கிரûஸ பொருத்தவரை வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது. கணிசமான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மட்டுமே ராகுல் காந்தியின் தலைமையில் மூன்றாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமையும். 100-க்கும் குறைவான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், பிரதமர் பதவிக்கு மாயாவதி, அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி மட்டுமல்லாமல் தேவெ கெüடாவும், சரத் பவாரும்கூட காத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் திமுக கூட்டணியில் கணிசமான இடங்களைப் பெற்று குறைந்தது 10 இடங்களையாவது வென்றுவிட வேண்டும் என்கிற காங்கிரஸின் எதிர்பார்ப்பில் நியாயமிருக்கிறது.
 தமிழ்நாடு காங்கிரûஸ பொருத்தவரை, பல்வேறு கோஷ்டிகளுக்கும் இடமளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. திமுக தலைமை சர்வ நிச்சயமாக வெற்றி பெற முடியும் என்று காங்கிரஸ் கருதும் தொகுதிகளின் பட்டியலை கேட்டால், கொடுப்பதற்குப் பதினாறு தொகுதிகளை காங்கிரஸ் அடையாளம் கண்டிருக்கிறது.
 அந்த 16 தொகுதிகளில் குறைந்தது 12 தொகுதிகளையாவது ஒதுக்கினால் மட்டுமே எல்லா கோஷ்டிகளையும் திருப்திபடுத்த முடியும் என்பது காங்கிரஸின் நிலைமை.
 கன்னியாகுமரி (வசந்த குமார்), ராமநாதபுரம் (திருநாவுக்கரசர்), சிவகங்கை (கார்த்தி சிதம்பரம்), திருப்பூர் (ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்), சேலம் (கே.வி. தங்கபாலு) அல்லது பெரியகுளம் (ஜே.எம். ஹாருண்) என்று ஐந்து இடங்களையும் புதுச்சேரி தொகுதியையும் காங்கிரஸுக்கு ஒதுக்குவதில் திமுக தலைமைக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை என்று கூறப்படுகிறது. மேலே குறிப்பிட்ட தொகுதிகளில் தேர்தலை எதிர்கொள்ள அந்த வேட்பாளர்களுக்கு பணபலம் இருக்கிறது என்பதுதான் அதற்குக் காரணம்.
 குறைந்த அளவு இடங்களை திமுக தர முற்பட்டால் அதைவிட அவமானம் வேறு எதுவும் இருக்க முடியாது என்கிற கருத்து காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் நிலவுகிறது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்துவிட்டு, தங்கள் கட்சிக்கு ஒற்றை இலக்கு இடங்களை ஒதுக்குவது என்பது அவமானப்படுத்துவதாக இருக்கும் என்று காங்கிரஸின் இரண்டாம் கட்டத் தலைவர்களும், தொண்டர்களும் கருதுகிறார்கள்.
 மக்களவைத் தேர்தலைப் பொருத்தவரை தமிழகத்தில் மாநிலக் கட்சிகளைவிட தேசிய கட்சிகளைச் சார்ந்துதான் வாக்களிக்கப்படுகின்றன. இந்த முறை ராகுல் காந்தி மட்டுமல்லாமல், காங்கிரஸ் தலைமை பிரியங்கா காந்தி வதேராவையும் களமிறக்கியிருப்பதால், ராகுல் - பிரியங்கா இருவருமே பிரசாரத்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம். அவர்களது செல்வாக்கை திமுக பயன்படுத்திக் கொள்ளும்போது "இரட்டை இலக்க இடங்களை காங்கிரஸுக்கு அளிப்பதுதானே நியாயமாக இருக்கும்?' என்று காங்கிரஸ் தரப்பு கேள்வி எழுப்புகிறது.
 புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியுடன் முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.வி. தங்கபாலு ஆகியோர் தில்லியில் முகாமிட்டு காங்கிரஸ் தலைமையைச் சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே ஐந்து தொகுதி என்று முடிவெடுத்து அதற்கான வேட்பாளர்களை ப. சிதம்பரம் பட்டியலிட்டிருப்பதாகவும், இப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை ஆலோசனை கேட்பது வெறும் சம்பிரதாயத்துக்கு மட்டுமே என்று தில்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 வரும் மக்களவைத் தேர்தலில் தண்ணீராகப் பணத்தை இறைக்கும் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டால் மட்டுமே அதிமுக கூட்டணியை எதிர்கொள்ள முடியும் என்கிற பரவலான கருத்து நிலவுகிறது. தேர்தல் களத்தில் திமுக தொண்டர்களின் தயவில்லாமல் காங்கிரஸால் ஈடுகொடுக்க முடியாது என்பதுதான் யதார்த்த உண்மை. தங்களது சொந்தப் பணத்தைச் செலவழித்து காங்கிரஸ் வேட்பாளரை வெற்றியடையச் செய்யும் பெரிய மனதுள்ள திமுகவினர் கிடையாது என்பதுதான் காங்கிரஸின் பலவீனம்.
 திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்க இருக்கும் இடங்கள் ஆறா, ஒன்பதா, பன்னிரண்டா, பதினாறா என்பதற்கு இன்னும் ஓரிரு நாட்களில் விடை கிடைத்துவிடும். குறைவான இடங்களை திமுக வழங்கினாலும் அதை ஏற்றுக்கொள்வதைத் தவிர காங்கிரஸுக்கு வேறு வழியில்லை என்பது திமுக தலைமைக்குத் தெரியும். அதிக இடங்களைக் கேட்டாலும் தரப்போவதில்லை என்பதும் காங்கிரஸ் தலைமைக்குத் தெரியும். இருந்தாலும் கேட்கட்டுமே என்று திமுகவும், கேட்டுத்தான் பார்ப்போமே என்று காங்கிரஸும் செயல்பட்டுக்கொண்டிருப்பதாகத்தான் தெரிகிறது.
 ஒன்று மட்டும் நிச்சயம். புதுமுகங்களுக்குக் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காது என்பதுதான் அது !
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com