பேச்சுவார்த்தை நடத்த புதுவை முதல்வர் நிபந்தனை: கிரண் பேடி ஏற்க மறுப்பு

புதுவை ஆளுநர் மாளிகை எதிரே முதல்வர் நாராயணசாமி நடத்தி வரும் தர்னா போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில்
பேச்சுவார்த்தை நடத்த புதுவை முதல்வர் நிபந்தனை: கிரண் பேடி ஏற்க மறுப்பு

புதுவை ஆளுநர் மாளிகை எதிரே முதல்வர் நாராயணசாமி நடத்தி வரும் தர்னா போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த ஞாயிற்றுக்கிழமை மாலை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அழைப்பு விடுத்தார். அதில் தான் விதித்த நிபந்தனைகள் ஏற்கப்படாததால், அவரைச் சந்திக்க முதல்வர் மறுத்துவிட்டார்.
 மக்கள் நலத் திட்டங்களுக்கு ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் அளிக்கவில்லை எனக் கூறி, முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் கடந்த 13-ஆம் தேதி முதல் தர்னாவில் ஈடுபட்டு வருகிறார்.
 இந்தப் போராட்டம் 5-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது. போராட்டம் தொடங்கிய மறுநாளே (பிப். 14) ஆளுநர் கிரண் பேடி துணை ராணுவப் படையினரின் பாதுகாப்புடன் தில்லி புறப்பட்டுச் சென்றுவிட்டார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு பிப். 21-ஆம் தேதி புதுவை திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டது.
 முதல்வர், அமைச்சர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஆளுநர் புதுவையில் இல்லாதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. மேலும், புதுச்சேரியில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால், இடைக்கால துணைநிலை ஆளுநரை நியமிக்கக் கோரி, சட்டப்பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பினார்.
 இதனிடையே, மத்திய அரசின் அறிவுறுத்தல் காரணமாக, தில்லியில் தான் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு, ஆளுநர் கிரண் பேடி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் புதுச்சேரிக்கு திரும்பினார்.
 மேலும், ஆளுநர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு தன்னை வந்து சந்திக்கும்படி முதல்வர் நாராயணசாமிக்கு அவர் நேரம் ஒதுக்கிக் கொடுத்தார். இதை முதல்வர் நாராயணசாமியும் ஏற்றுக் கொண்டார்.
 இந்த பேச்சுவார்த்தை தலைமைச் செயலகத்தில்தான் நடத்தப்பட வேண்டும், 39 கோரிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்து அரசுச் செயலர்கள், துறைத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும், ஆளுநரின் ஆலோசகர் தேவநீதிதாஸ் பங்கேற்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை முதல்வர் விதித்தார்.
 இந்த நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படாததால், முதல்வர் நாராயணசாமி பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை. இதனால், ஆளுநர் புதுவை திரும்பியும், முதல்வரின் போராட்டம் முடிவுக்கு வராமல் தொடர்கிறது.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com