மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை: யாருக்கும் ஆதரவு கிடையாது

வரவுள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என, ரஜினி மக்கள் மன்றத் தலைவரும், நடிகருமான ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை: யாருக்கும் ஆதரவு கிடையாது

வரவுள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என, ரஜினி மக்கள் மன்றத் தலைவரும், நடிகருமான ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
 தேர்தலில் எந்தக் கட்சிக்கும் எனது ஆதரவு இல்லை எனவும் மன்றத்தின் பெயரில் எனது படமோ, மன்றத்தின் கொடியோ எந்தவொரு கட்சிக்கும் ஆதரவாகப் பிரசாரம் செய்வதற்குப் பயன்படுத்தக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 ரஜினிகாந்த் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார்.
 இருந்தபோதும், ஓராண்டுக்கு மேலாகிவிட்டபோதும், இது வரை அவர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதனால், ரஜினிகாந்த் எப்போது அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பிலேயே அவருடைய ரசிகர்கள் தொடர்ந்து காத்திருக்கின்றனர்.
 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், புதிதாக தொடங்கிய நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் உள்பட அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், ரஜினிகாந்த் எந்த முன்னேற்பாடுகளும் செய்யாமல் இருந்துவந்தார்.
 இதற்கிடையே, மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு அவர் ஆதரவு தெரிவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் இருந்துவந்தது.
 இந்தச் சூழலில், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஞாயிற்றுக்கிழமை காலை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு மன்றத்தின் சார்பில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:
 வருகின்ற மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்தான் எங்களது இலக்கு.
 நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் கிடையாது.
 அதனால், ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் என்னுடைய படமோ, மன்றத்தின் கொடியோ, எந்தக் கட்சிக்கும் ஆதரவாகவோ, பிரசாரம் செய்வதற்காகவோ யாரும் பயன்படுத்தக்கூடாது.
 தமிழகத்தின் முக்கியப் பிரச்னை தண்ணீர். வரவிருக்கும் தேர்தலில் மத்தியில் நிலையான, வலுவான ஆட்சி அமைத்து, தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை யார் நிரந்தரமாகத் தீர்த்து வைக்கக்கூடிய திட்டங்களை வகுத்து, அதை உறுதியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறீர்களோ, அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து, ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com