முதுநிலை மருத்துவப் படிப்பு: தமிழகத்தில் 112 இடங்களை அதிகரிக்க அனுமதி

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் தமிழகத்துக்கு மேலும் 56 இடங்களை ஒதுக்க இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி மாநிலத்துக்கு இதுவரை கூடுதலாக 112 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் தமிழகத்துக்கு மேலும் 56 இடங்களை ஒதுக்க இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி மாநிலத்துக்கு இதுவரை கூடுதலாக 112 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
 வரும் நாள்களில் மேலும் சில இடங்களுக்கு அனுமதி கிடைக்கும் என்று மருத்துவக் கல்வி வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
 தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தற்போதைய நிலவரப்படி 1250 முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன. அதில், அதிகபட்சமாக சென்னை மருத்துவக் கல்லூரியில் 213 இடங்கள் உள்ளன.
 அதைத் தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 152 இடங்களும், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் 134 இடங்களும் இருக்கின்றன. இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற முதுநிலை மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 இதனால், எதிர்வரும் கல்வியாண்டில், மாநிலத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், தமிழகத்தில் முதுநிலை படிப்புகளுக்கு கூடுதலாக 157 இடங்களை ஒதுக்குமாறு இந்திய மருத்துவ கவுன்சிலிடம் மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகம் வலியுறுத்தியது.
 அதன் அடிப்படையில் தற்போது இரண்டு கட்டங்களாக 112 இடங்களை அதிகரிக்க மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. மேலும், சில இடங்களுக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com