விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது: "தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன்

மாணவர்கள் விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது என "தினமணி' ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேசினார்.
விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது: "தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன்

மாணவர்கள் விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது என "தினமணி' ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேசினார்.
 ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் "தினமணி' நாளிதழ் மற்றும் பரமக்குடி பாரத் அக்ரோ புராடக்ட்ஸ், கோபுகான் சித்தோரியூ கராத்தே பள்ளி சார்பில் 13-ஆவது மாநில அளவிலான கராத்தே போட்டிகள் பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
 இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு "தினமணி' ஆசிரியர் கி. வைத்தியநாதன் தலைமை வகித்து, பேசியதாவது:
 அண்ணல் காந்தியடிகள் பிறந்த போர்பந்தர் மாவட்டம், பெருமைக்குரிய மாவட்டம். இந்தியாவில் அதற்கு இணையான மாவட்டம் ராமநாதபுரம் மாவட்டம்தான். சுவாமி விவேகானந்தரை சிகாகோ மாநாட்டுக்கு அனுப்பிவைத்து உலக அளவில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த மாவட்டம் இது. தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே. சாமிநாதையருக்கு ஓலைச்சுவடிகளைத் தேடிப்பிடித்து செவ்விலக்கி யங்களைப் பதிப்பிப்பதற்கு நிதி உதவி வழங்கி ஆதரித்த சேதுபதி மன்னர்களின் மாவட்டம் இது. அணுசக்தி துறையில் இந்தியாவை உலகறியச் செய்த ஐயா அப்துல்கலாம் பிறந்த மாவட்டம் இது.
 மாணவர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை மட்டுமே கொள்ளாமல் உடல்நலம் பேணுவதிலும் அக்கறை கொள்ள வேண்டும். தினசரி உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தைப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
 தமிழ்நாட்டின் 9 மாவட் டங்களிலிருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பரமக்குடியில் நடக்கும் இந்த கராத்தே போட்டிக்காக தங்களது சொந்தச் செலவில் வந்திருப்பது மிகப் பெரிய வியப்பு. அந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தற்காப்பு பயிற்சியில் உடல்நலம் பேணலும் தேவையென்று உணர்ந்து செயல்படுவதற்கு அவர்களைப் பாராட்ட வேண்டும். உடல் வலுவுள்ள இளைஞர்கள்தான் வலுவான தேசத்தை உருவாக்க முடியும் என்று சுவாமி விவேகானந் தர் கூறியதை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது கோபுகான் சித்தோரியூ கராத்தே பள்ளி என்றார்.
 போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கி, ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் என். காமினி பேசியதாவது:
 ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே பெரும்பாலும் மக்கள் மத்தியில் மோசமான மாவட்டம் என்ற கருத்துள்ளது. ஆனால், இம்மாவட்டம் சமூக நல்லிணக்கத்துக்கான முன்னோடி மாவட்டம் என்பது இங்கு வந்த பிறகுதான் எனக்கு தெரிந்தது.
 தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டங்களில் ராமநாதபுரம் மாவட்டமும் ஒன்றாக உள்ளது. இதில் "ஆபரேஷன் டிஸ்ட்ரிக்ட்' என்ற திட்டத்தில் பரமக்குடியை மையமாக கொண்ட பல கிராமங்களைத் தத்தெடுத்து அவற்றின் வளர்ச்சிக்கான பணிகள் நடைபெறுகின்றன. "தினமணி' நாளிதழ் நடத்தும் இதுபோன்ற போட்டிகள் இம்மாவட்டத்தில் சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, "நாம் அனைவரும் இந்தியர்களே' என்று பெருமைப்படும் அளவுக்கு சிறப்பாக உள்ளது.
 காஷ்மீரில் இன்னுயிர் நீத்த வீரர்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், கராத்தே போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவரும் வருங்காலத்தில் மிகப்பெரிய ராணுவ வீரர்களாக வரவேண்டும். மேலும் இதுபோன்ற ஆரோக்கியமான போட்டிகளை "தினமணி' தொடர்ந்து நடத்த வேண்டும். இந்திய ராணுவத்தினரை போல், நாம் ஒவ்வொருவரும் தேசப்பற்றுடன் விளங்க வேண்டும். "இந்திய தேசத்தைக் காப்பேன்' என்று உறுதிமொழி ஏற்க வேண்டும் என்றார்.
 இந்நிகழ்ச்சியில் 420 குழந்தைகளுக்கு பரிசுக் கேடயமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன. தமிழ்நாடு கராத்தே கழக பொதுச்செயலர் எம். கனகராஜ், பாரத் அக்ரோ புராடக்ட்ஸ் அரிமா ஆர்.எம். கண்ணப்பன், சோலைமலை இந்தியன் ஹெர்பல் ட்ரக்ஸ் நிறுவனர் டாக்டர் எஸ். வரதராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
 லயன்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஷோபனாதேவி வரவேற்றார். மதுரை மாவட்ட தலைமை பயிற்சியாளர் வி. முத்துக்கிருஷ்ணன், பாண்டியன் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 நிகழ்ச்சியை சௌராஸ்ட்ரா மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர் ஜெயபிரகாஷ் தொகுத்து வழங்கினார்.
 தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் மதுரைக் கிளை முதுநிலை மேலாளர் ரகு சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com