அதிமுக-பாமக கூட்டணி ஏற்கெனவே 2009ல் மக்களால் தோற்கடிக்கப்பட்ட கூட்டணி: மு.க.ஸ்டாலின் விமர்சனம்

அதிமுக-பாமக கூட்டணி ஏற்கெனவே 2009ல் மக்களால் தோற்கடிக்கப்பட்ட கூட்டணி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அதிமுக-பாமக கூட்டணி ஏற்கெனவே 2009ல் மக்களால் தோற்கடிக்கப்பட்ட கூட்டணி: மு.க.ஸ்டாலின் விமர்சனம்

அதிமுக-பாமக கூட்டணி ஏற்கெனவே 2009ல் மக்களால் தோற்கடிக்கப்பட்ட கூட்டணி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. பாமகவை பொறுத்தவரை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. இன்று இதுதொடர்பாக இருதரப்பு பேச்சுவார்த்தையில் பாமகவுக்கு 7 தொகுதிகளுடன் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அதிமுக-பாமக கூட்டணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். வேலூர் அருகே ஆம்பூரில் திமுக வாக்குச்சாவடி முகவர் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், பா.ம.க வோடு அ.தி.மு.க கூட்டணியாம். இதே பா.ம.க கட்சியின் நிறுவனர் ராமதாஸும், அவருடைய மகனாகிய அன்புமணி ராமதாஸும் என்னென்ன பேச்சு பேசியிருக்கிறார்கள். நம்மையும் சேர்த்துதான் பேசியிருக்கிறார்கள். அது வேறு. அ.தி.மு.க வுடன் கூட்டணி சேர்ந்து ஏற்கனவே ஏழு தொகுதிகளில் அவர்கள் போட்டியிட்ட போது என்ன நிலைக்கு ஆளானார்கள் என்பது தெரியும். 7 தொகுதிகளில் போட்டியிட்டு 9 தொகுதிகளில் தோல்வியடைந்தார்கள் என்று நான் அப்போதே சொன்னேன். 

சில பேருக்கு புரியவில்லை. 7 தொகுதி என்பது நாடாளுமன்றத் தொகுதிகள் கொடுத்தது. இன்னொன்று எது என்றால் ராஜ்யசபா. ராஜ்யசபா என்பது இரண்டு எம்.பி க்கு சமம். இப்பொழுதும் 7+1 கொடுத்திருக்கிறார்கள். என்ன நடக்கப் போகிறது என்பதை நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தபிறகு பாருங்கள். இதே ராமதாஸ், சமீபத்தில் அ.தி.மு.கவை விமர்சித்து மேடையில் பேசிவிட்டோ, அறிக்கை விட்டு விட்டோ போகவில்லை. புத்தகமே போட்டிருக்கிறார். அதன் தலைப்பு என்ன தெரியுமா? ‘கழகத்தின் கதை’. அந்தப் புத்தகத்தை போட்ட பெரிய மனுஷன் தான் இன்றைக்கு ஊழல்வாதிகளிடம் கூட உட்கார்ந்துகொண்டு கையெழுத்து போடுகிறார். வெட்கம் இல்லை? சூடு இல்லை? சொரணை இல்லை? நான் கேட்கிறேன்.

அப்படிப்பட்ட நிலையில் ஒரு பதவி தேவைதானா? 7 சீட் மட்டுமல்ல, 1 ராஜ்யசபா சீட் மட்டுமல்ல. அதற்குப் பின்னாலும் இருக்கிறது. அதெல்லாம் வெளியில் வரத்தான் போகிறது. கழகத்தின் கதை என்கிற புத்தகத்தில், எடப்பாடியை மட்டுமல்ல, ஜெயலலிதாவைப் பற்றியும் அவர்கள் என்னென்ன ஊழல் செய்திருக்கிறார்கள், ஒவ்வொருவருடைய சொத்து என்ன, அமைச்சர்களின் வண்டவாளங்கள் என்ன என்பதையெல்லாம் எழுதியிருக்கிறார் ராமதாஸ். இன்றைக்கு கூட்டு சேர்ந்திருக்கிறார் என்று சொன்னால், மக்களைப் பற்றி நாட்டைப் பற்றி கவலைப்படாமல் பணத்தைப் பற்றி கவலைப்பட்டு இன்றைக்கு கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள். 

இந்த நிலையில் அ.தி.மு.க - பா.ஜ.க - பா.ம.க ஒன்று சேர்ந்திருக்கிறது. நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி நேரத்திற்காக அல்ல, சூழ்நிலைகளுக்காக அல்ல, நாட்டு மக்களின் பிரச்னைகளை, குறைகளை தீர்த்து வைப்பதற்காகத் தான் என்பதை உறுதியோடு இங்கே நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com