ஒசூர் பேரவைத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிப்பு

2019 ஜனவரி 7 ஆம் தேதி முதல் ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியாக இருப்பதாக இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 
ஒசூர் பேரவைத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிப்பு


2019 ஜனவரி 7 ஆம் தேதி முதல் ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியாக இருப்பதாக இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

1998-ஆம் ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகனூரில் கர்நாடக எல்லையில் நடைபெற்ற போராட்டத்தின் போது கல்வீச்சு மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி உள்பட 16 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. மேலும், பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார். இந்த ராஜிநாமாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றுக் கொண்டதாக அறிவித்தார். 

ஆனால், தமிழகச் சட்டப்பேரவை இணையதளத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெயர்ப் பட்டியலில் அவர் பெயர் இன்னும் தொடர்ந்து படத்துடன் இடம்பெற்றிருக்கிறது. 

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி சிறை தண்டனை பெற்று, தகுதி நீக்கத்துக்குள்ளான சட்டப்பேரவை உறுப்பினர் மேல்முறையீடு செய்திருந்தாலும், உடனடியாக தகுதி நீக்கம் அமலுக்கு வரும் என்று உச்சநீதிமன்றமே ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது. 

இந்த நிலையில, இன்னும் பாலகிருஷ்ணா ரெட்டியின் பெயர் சட்டப்பேரவை இணையதளத்திலிருந்து நீக்கப்படாமல் இருப்பது, மக்களாட்சித்  தத்துவமும், சட்டப்பேரவை ஜனநாயகமும் படுகொலை செய்யப்பட்டுள்ளதற்கு சமமானதாகும். தற்போது சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் காலியிடங்கள் 21 என்பதற்குப் பதிலாக, இன்னும் 20 இடங்கள் என்றே தொடர்ந்து நீடித்தது.

பாலகிருஷ்ணா ரெட்டியின் பெயரை சட்டப்பேரவை இணைய தளத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும். அவரின் தகுதி நீக்கத்தை தேர்தல் ஆணையத்துக்கு உடனடியாக அறிவித்து, சட்டப்பேரவையில் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கையை 21- ஆக மாற்றி அமைக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். 

இந்நிலையில், 2019 ஜனவரி 7 ஆம் தேதி முதல் ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியாக இருப்பதாக இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

இதையடுத்து சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கைளின் காலியிடங்கள் 21 ஆக அதிகரித்துள்ளது. 

திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக உறுப்பினர் போஸ் ஆகிய இருவரும் கடந்தாண்டு மரணம் அடைந்ததால் திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகள் காலியிடங்களாக அறிவிக்கப்பட்டன. ஏற்கனவே, அதிமுக உறுப்பினர்கள் 18 பேர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் பேரவை உறுப்பினர் பதவியை பறித்து பேரவைத் தலைவர் ப.தனபால் நடவடிக்கை எடுத்தார். 

தற்போது ஓசூர் பேரவைத் தொகுதியையும் சேர்த்து மொத்தம் 21 தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தலோடு நடக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com