பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது

எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் கூட்டமைப்பின் வேலைநிறுத்தப் போராட்டம் நாடு


எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் கூட்டமைப்பின் வேலைநிறுத்தப் போராட்டம் நாடு முழுவதும் திங்கள்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் 20 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இதன்காரணமாக, பல்வேறு பணிகள் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
4ஜி சேவையை பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு வழங்கவேண்டும்; பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தை தனியாரிடம் தாரைவார்க்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பது உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. இந்தப் போராட்டத்தில் தமிழகத்தில் மட்டும் 20 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் தங்கள் பணிகளைப் புறக்கணித்தனர். இந்த வேலைநிறுத்தத்தால், பல்வேறு பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் சேவை மையங்கள் முழுமையாக மூடப்பட்டன. இதுதவிர, பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டன.
இது குறித்து பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கக் கூட்டமைப்பு தலைவர் கே.நடராஜன் கூறியது:-
நாடு முழுவதும் நடைபெறும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் 1 லட்சத்து 76 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 20 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், தர்ணா போராட்டம் உள்பட பல்வேறு போராட்டம் நடைபெற்றது. 95 சதவீதம் பேர் பணிக்கு செல்லவில்லை. 
4 ஜி சேவையை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் மீது எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தை அளித்தால் மட்டுமே எங்களது போராட்டத்தை திரும்பப் பெறுவோம். பேச்சுவார்த்தைக்கு இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை. மக்கள் நலன், நிர்வாக நலன் சார்ந்தே எங்கள் போராட்டம் அமைந்துள்ளது. எனவே, மத்திய அரசு உரிய பதிலை எங்களுக்கு அளிக்க வேண்டும். உடனடியாக அரசு எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com