புதுவை முதல்வரின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு: ஆளுநருடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவு

புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக கடந்த 6 நாள்களாக முதல்வர் வே. நாராயணசாமி நடத்தி வந்த தர்னா போராட்டம் திங்கள்கிழமை
புதுவை ஆளுநர் மாளிகையில் திங்கள்கிழமை இரவு ஆளுநர் கிரண் பேடியுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வெளியே வந்த முதல்வர் வே. நாராயணசாமி உள்ளிட்டோர்.
புதுவை ஆளுநர் மாளிகையில் திங்கள்கிழமை இரவு ஆளுநர் கிரண் பேடியுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வெளியே வந்த முதல்வர் வே. நாராயணசாமி உள்ளிட்டோர்.


புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக கடந்த 6 நாள்களாக முதல்வர் வே. நாராயணசாமி நடத்தி வந்த தர்னா போராட்டம் திங்கள்கிழமை இரவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆளுநருடன் நடத்தப்பட்ட 4.30 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மக்கள் நலத் திட்டங்கள் சார்ந்த 39 கோரிக்கைகளை ஆளுநர் கிரண் பேடி ஏற்க மறுப்பதாகக் கூறி, முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கடந்த 13-ஆம் தேதி பிற்பகல் 1.30 மணி முதல் ஆளுநர் மாளிகை முன் தர்னா போராட்டத்தைத் தொடங்கினர். 
இதனிடையே, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கடந்த 14-ஆம் தேதி காலை மத்திய துணை ராணுவத்தின் உதவியுடன் ஆளுநர் மாளிகையை விட்டு வெளியேறிய கிரண் பேடி, நிகழ்ச்சிகளை பாதியிலேயே ரத்து செய்து விட்டு பிப். 17-ஆம் தேதி பிற்பகல் புதுச்சேரி திரும்பினார். அன்று மாலை 6 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வரும்படி முதல்வர் நாராயணசாமிக்கு அவர் அழைப்பும் விடுத்தார்.
எனினும், நாராயணசாமி விதித்த 4 நிபந்தனைகளை கிரண் பேடி ஏற்க மறுத்ததால் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
இந்த நிலையில், 4 நிபந்தனைகளை பொதுமக்கள் நலன் கருதி தளர்த்திக் கொள்வதாக முதல்வர் நாராயணசாமி திங்கள்கிழமை கிரண் பேடிக்கு கடிதம் அனுப்பினார். இதையடுத்து, மாலை 5 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்த வரும்படி முதல்வருக்கு கிரண் பேடி அழைப்பு விடுத்தார்.
இதைத் தொடர்ந்து, முதல்வர் நாராயணசாமியும், கிரண் பேடியும் ஆளுநர் மாளிகையில் திங்கள்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 9.25 மணி வரை சுமார் 4.30 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
அதன் பிறகு முதல்வர் வே. நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆளுநர் கிரண் பேடியுடன் 39 கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில் ஏஎப்ஃடி, சுதேசி, பாரதி பஞ்சாலைகள் தொடர்பான கோரிக்கைகளை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். ஏஎப்ஃடி பஞ்சாலையை மூடும் முடிவை கைவிடுவது தொடர்பாக பரிசீலனை செய்வதாக உறுதியளித்தார். 10ஆயிரம் பேருக்கு விதவை, முதியோர் உதவித்தொகை வழங்க ஒப்புக்கொண்டார்.
இலவச அரிசித் திட்டத்தில் அரிசியே தொடர்ந்து வழங்க ஒப்புக்கொண்டார். காவலர் தேர்வுக்கான வயது வரம்பை 24 ஆக உயர்த்துவது தொடர்பான கோப்பு தற்போது மத்திய உள்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதை உள்துறை அதிகாரிகளிடம் பேசி, வயது வரம்பை உயர்த்த பரிசீலனை செய்வதாக தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, நிதி அதிகாரத்தை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல்வர், அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிக்க ஒப்புக்கொண்டார்.
கூட்டுறவு சர்க்கரை ஆலையை பகிரங்க ஏலமிட்டு, அதில் கிடைக்கும் தொகையை தொழிலாளர்களுக்கு வழங்கவும், விவசாயிகளுக்கான கரும்பு பட்டுவாடா தொகை வழங்கவும் பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்தார்.
ஆளுநரின் களஆய்வு, அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தும் விவகாரத்தை பொருத்தவரை சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல்வரின் நாடாளுமன்றச் செயலாளர் லட்சுமிநாராயணன் தொடுத்த வழக்கின் தீர்ப்பு அடிப்படையில் முடிவெடுக்கப்படும்.
ஒரு சில கோரிக்கைகளில் ஆளுநர் விடாப்பிடியாக இருந்தாலும், மக்கள் நலன் கருதி போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பது என அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதுவரை போராட்டத்துக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், மாநில முதல்வர்களுக்கு நன்றி என்றார் முதல்வர் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com