ஸ்டெர்லைட் தீர்ப்பு: தலைவர்கள் வரவேற்பு

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பதற்கு திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட  பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பதற்கு திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட  பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின்: ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தீர்ப்பைத் திமுக சார்பில் வரவேற்கிறேன். தீர்ப்பு முழுமையாக வந்த பிறகு முழுமையான எனது கருத்தைத் தெரிவிக்கிறேன்.
கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): உச்சநீதிமன்றத்தின்  தீர்ப்பு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலைத் தருவதாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையில் நிரந்தர தீர்வு காண தமிழக அரசு தொடர்ந்து நீதிமன்றத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜயகாந்த் (தேமுதிக): உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களின் போராட்டத்துக்கும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராடிய 13 அப்பாவி மக்களின் உயிர்த் தியாகத்திற்கும் கிடைத்த மிகப்  பெரியவெற்றி. உச்சநீதிமன்றம் அப்பகுதி மக்களின் உணர்வுகளை மதித்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருப்பதை தேமுதிக சார்பில் வரவேற்கிறேன்.
ராமதாஸ் (பாமக): ஸ்டெர் லைட்  ஆலைக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் இந்தத் தீர்ப்பு தொழில்நுட்பக் காரணங்களின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட்ட ஒன்று. சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடக்கத்திலிருந்து மீண்டும் இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது.  அப்போது ஆலை மூடப்பட்டதற்கான காரணங்களை ஆதாரங்களுடன் பட்டியலிடவும், வலிமையான வாதங்களை முன்வைக்கவும் தமிழக அரசு தயாராக வேண்டும். 
வைகோ (மதிமுக):  ஸ்டெர் லைட் ஆலையை எதிர்த்து 22 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளேன். இந்த நாட்டில் நீதியும், ஜனநாயகமும் காப்பாற்றப்படும். மக்களைக் காக்கும் தெய்வங்களாக நீதிபதிகளை மக்கள் கருதுகின்றனர். உயர்நீதிமன்றத்துக்குச் செல்லுமாறு உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. இனிமேல் உயர்நீதிமன்றத்துக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் செல்லும். ஆனால், நாங்கள் விடமாட்டோம். ஆலையை எந்நாளும் திறக்க விடமாட்டோம்.
ஜி.கே.வாசன் (தமாகா): ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கத் தடை விதித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தூத்துக்குடி மக்களுக்குக் கிடைத்த நியாயமான தீர்ப்பு.
கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): உச்சநீதிமன்றத் தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. தூத்துக்குடி மக்களின் போராட்டத்துக்கும், தியாகத்துக்கும் கிடைத்த வெற்றியாகும். இத்தீர்ப்பு வரும் நேரத்தில், சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் 15- ஆம் தேதியில் இருந்து காணவில்லை என்ற தகவல் மிகுந்த கவலை அளிக்கிறது. 
துப்பாக்கிச் சூட்டுக்கு காவல்துறை உயர் அதிகாரிகளே காரணம் என்ற விதத்தில் ஆவணங்களை, அவர் காணாமல்போன அன்று காலை தான் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் வெளியிட்டிருந்தார். அவர் எங்கிருந்தாலும் அவரை உடனடியாக மீட்க வேண்டும்.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், சுற்றுசூழல் பாதுகாப்பிற்குமான மிக முக்கிய தீர்ப்பாக அமைந்துள்ளது. இதனை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வரவேற்கிறது. ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் புதிய மனுதாக்கல்  செய்ய இருப்பதாக கூறியுள்ளது. இதனையும் நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும். 
திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி): உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு தனது சாதனை என்று பெருமைப்பட்டுக் கொள்வதோடு தமிழக அரசு நின்று விடாமல், இது தொடர்பாகக் கொள்கை முடிவெடுக்க வேண்டும்.
தி.வேல்முருகன் (வாழ்வுரி மைக் கட்சி): ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. தமிழக அரசு  அரசாணைக்குப் பதில் அரசின் கொள்கை முடிவாக, சிறப்புத் தீர்மானம் இயற்றி ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com