
சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடியில் உள்ள இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவில் வீரர்களின் அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சிகள்.
சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடியில் உள்ள இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் 24 வாரங்கள் பயிற்சி பெற்ற 144 வீரர்களை நாட்டின் எல்லைப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பயிற்சி மையத்தின் மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பயிற்சி மையத்தின் ஐஜி ஆஸ்டின் ஈப்பன் தலைமை வகித்தார். இதில், இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்பு படையின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் ராகேஷ் குமார் மிஸ்ரா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மேலும், பயிற்சியில் சிறந்து விளங்கிய அமன் ராவத், நீரஜ் உபாதியா, லக்பா டிக்கி செரி, மிலன் சிங், கிருஷ்ண்டு சர்கார் ஆகிய வீரர்களை பாராட்டி கோப்பைகளை வழங்கினார்.
விழாவில், நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் வீரர்களின் அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, இந்திய தேசியக் கொடியை முன்னிறுத்தி வீரர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். வீரர்களின் சாகச நிகழ்ச்சியாக கராத்தே, கயிறு ஏறுதல், தீ வளையத்திற்குள் சாகசம், துப்பாக்கிகளை கையாளும் விதம், நடனம் போன்ற ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பயிற்சி நிறைவு விழாவில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தின் கமாண்டன்ட் ஜஸ்டின் ராபர்ட் உள்ளிட்ட ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர்.
4 பெண்கள்: கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பயிற்சி மையத்தில் 2018 ஆம் ஆண்டு வரை சுமார் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பயிற்சியை நிறைவு செய்து பல்வேறு மாநில எல்லைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பயிற்சி நிறைவு செய்துள்ள 4 பெண் வீரர்கள் உள்பட 144 வீரர்களும் ஜம்மு-காஜ்மீர், ஜார்கண்ட் , உத்தரப் பிரதேசம், புதுதில்லி, பிகார், ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகண்ட், மேற்கு வங்கம் ஆகிய 13 மாநில எல்லைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.