
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்ட வழக்கில் சிறையில் இருந்த முருகன், கருப்பசாமி ஆகியோர் ஜாமீனில் இன்று விடுவிக்கப்பட்டனர்.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்ட வழக்கில் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி கடந்தாண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். மேலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக கணிதத் துறை முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மற்றும் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது சி.பி.சி.ஐ.டி. போலீஸார் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். மேலும், இவர்கள் மீதான குற்றப் பத்திரிகையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, முருகன் மற்றும் கருப்பசாமி உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை கடந்த 12 ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், இருவருக்கும் தலா ரூ.75 ஆயிரத்துக்கு 3 நபர் ஜாமீன் அளிக்க வேண்டும், வெளிநாட்டுக்குச் செல்லக்கூடாது, வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனைகளுடன், விசாரணை நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த உச்ச நீதிமன்ற உத்தரவானது, விசாரணை நீதிமன்றமான ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்துக்கு வந்து சேர்ந்தது. இதையடுத்து, மாவட்டக் கூடுதல் நீதிபதி சுமதி சாய்பிரியா, முருகன், கருப்பசாமி ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஜாமீன் நகல், மதுரை மத்திய சிறையை சென்றடைந்ததும், இவர்கள் இருவரும் புதன்கிழமை சிறையிலிருந்து வெளியே வருவர் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி முருகன், கருப்பசாமி ஆகியோர் இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 10 மாத சிறை வாசத்திற்கு பிறகு இருவரும் ஜாமீனில் வெளிவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறையில் இருந்து வெளிவந்த பின் முருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக என் மீது தொடரப்பட்ட வழக்கு பொய்யானது, வழக்கை சட்டப்படி சந்திப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.