
காவிரி வழக்கில் மறுசீராய்வு மனு, விளைபொருளுக்கு விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் கூடிய மக்களவைத் தேர்தல் அறிக்கையை தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, கூட்டமைப்பின் மாநிலச் செயலர் செ. நல்லசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான வேளாண் ஆணையம் அளித்த பரிந்துரைகளை மத்திய அரசு விரைந்து அமல்படுத்த வேண்டும். உற்பத்தி செலவிலிருந்து 50 சதவீதம் கூடுதலாக விளைப்பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
காவிரி வழக்கின் தீர்ப்பை மறுசீராய்வு கோரி மனு தாக்கல் செய்ய வேண்டும். தினந்தோறும் நீர்ப்பங்கீட்டு முறையே தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும். உபரிநீர் கடலில் கலப்பது மடைமாற்றப்பட்டு ஏரி, குளங்களில் தேக்க வழிவகை கிடைக்கும். பெட்ரோலிய இறக்குமதி மூலம் ஆண்டுக்கு ரூ.8 லட்சம் கோடிக்கு அந்நிய செலாவணி இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதற்கு பதிலாக எத்தனாலை எரிபொருளாகப் பயன்படுத்தலாம்.
தமிழகத்தில் மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும். அதுவரை டாஸ்மாக் மதுக்கடைகளில் பனை, தென்னையிலிருந்து தயாரிக்கப்படும் கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் வேளாண்மைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். பயிர்க் காப்பீட்டை தனி நபர் காப்பீடாக மாற்றியமைக்க வேண்டும். ஊழல், முறைகேடுகள் குறைந்தால் மட்டுமே நாட்டில் அமைதி நிலவும். எனவே, வலுவான லோக்பால் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும்.
பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதைப் போன்று நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கும் தடை விதிக்க வேண்டும். உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்புகளை தன்னாட்சி மற்றும் அதிகாரம் கொண்டவைகளாக மார்ற தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இக்கோரிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளை மட்டுமே மக்களவைத் தேர்தலில் ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்.