2009-இல் மக்களால் தோற்கடிக்கப்பட்டதுதான் அதிமுக-பாமக கூட்டணி

அதிமுக-பாமக கூட்டணி 2009-இல் மக்களால் தோற்கடிக்கப்பட்டதுதான். பாமகவுக்கு மக்களைப் பற்றியோ, நாட்டைப் பற்றியோ கவலை கிடையாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஆம்பூர் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்.
ஆம்பூர் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்.


அதிமுக-பாமக கூட்டணி 2009-இல் மக்களால் தோற்கடிக்கப்பட்டதுதான். பாமகவுக்கு மக்களைப் பற்றியோ, நாட்டைப் பற்றியோ கவலை கிடையாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஆம்பூர் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டம் சோலூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய 
மு.க.ஸ்டாலின் அதிமுக-பாமக கூட்டணி குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். கூட்டத்தில் அவர் பேசியது:
தமிழகத்தில் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என அனைத்து கருத்துக் கணிப்புகளும் கூறுகின்றன. இந்நிலையில்தான் தமிழகத்தில் தற்போது அதிமுகவை மிரட்டி பாஜக கூட்டணி அமைக்கிறது. மக்களவை கூட்டத் தொடரில் அதிமுகவைச் சேர்ந்த தம்பிதுரை பேசும்போது, ஜிஎஸ்டியால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும், பாஜகவுடன் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என்றும் பேசினார். பாஜகவுக்கு அடிப்படைக் கருத்துகள், கொள்கைகள் கிடையாது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது கொடநாடு கொலை வழக்கு, அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் ஆகியவை உள்ளன. குட்கா ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது. 
21 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டப் பேரவை உறுப்பினர்கள் மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. இதுபோன்ற சூழலில் அதிமுகவை அச்சுறுத்திப் பணிய வைத்து பாஜகவினர் கூட்டணி அமைத்துள்ளனர்.
பாமக மீது தாக்கு: தற்போது அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது. பாமக ஏற்கெனவே கடந்த 2009-இல்  அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 7 தொகுதிகளில் போட்டியிட்டது. அந்த 7 தொகுதிகளிலும் தோல்வி அடைந்ததோடு, மாநிலங்களவைத் தேர்தலிலும் தோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில் மீண்டும் அக்கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும், அவரது மகன் அன்புமணியும் அதிமுக ஊழல் கட்சி என்று பேசி வந்தனர். அத்துடன் அதிமுகவின் கதை என்ற தலைப்பில் ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மீதான ஊழல் மற்றும் சொத்து விவரங்கள் அடங்கிய புத்தகத்தை ராமதாஸ் வெளியிட்டார். இன்றைக்கு அவர்கள்தான் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளனர். பாமகவுக்கு மக்களைப் பற்றியோ, நாட்டைப் பற்றியோ கவலை கிடையாது. பணம் மட்டுமே முக்கியம். 
ஆனால் மக்கள் பிரச்னைகளுக்காக அமையும் கூட்டணிதான் திமுக கூட்டணி. ஆம்பூர் தொகுதியில் 242 வாக்குச் சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு  வாக்குச் சாவடிக்கும் 20 முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் 20 வாக்குகள் சேகரித்தால் போதும்; அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார் ஸ்டாலின்.
திமுக பொருளாளர் துரைமுருகன், எம்எல்ஏ-க்கள் ஆர்.காந்தி, நந்தகுமார், நல்லதம்பி, கார்த்திகேயன், ஈஸ்வரப்பா, முன்னாள் எம்.பி. முகமது சகி உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com