அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தது ஏன்?: ராமதாஸ் விளக்கம்

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றது ஏன் என்பது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தது ஏன்?: ராமதாஸ் விளக்கம்


மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றது ஏன் என்பது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பிறகு விளக்கம் அளித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக 3-ஆவது பெரிய கட்சி பாமகதான். 
 மக்களவைக்கானத் தேர்தலில் பாமகவின் தலைமையில் கூட்டணி அமைப்பது சாத்தியமில்லை என்ற நிலையில், அதிமுக, திமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளில் ஒன்றுடன் அணி சேருவதுதான் வாய்ப்பாக இருந்தது.
 அதிமுக, திமுக ஆகிய இரண்டில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதைத் தீர்மானிக்க வேண்டியிருந்தது.  
2004-09 காலத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இருந்த போது தமிழகத்தின் நலன் கருதி ஏராளமானத் திட்டங்களைக் கொண்டு வந்தார். அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளால் சேலத்தில் ரூ.139 கோடியில் அதி உயர் சிறப்பு மருத்துவமனை, மதுரை மற்றும் காஞ்சிபுரத்தில் மண்டல புற்றுநோய் மையம், நெடுஞ்சாலைகளில் 10 இடங்களில் விபத்துக்காய சிறப்பு சிகிச்சை மையங்கள் உள்ளிட்ட பல திட்டங்களைக் கொண்டு வந்தார்.
மதுரையில் ரூ.150 கோடியில் எய்ம்ஸுக்கு இணையான அதி உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான நிதி முழுமையாக ஒதுக்கப்பட்டு, அப்போதிருந்த திமுக அரசால் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக ஒதுக்கப்பட்ட நிதி வீணடிக்கப்பட்டது. அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டிருந்தால் அது கடந்த 10 ஆண்டுகளில் இப்போது கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையைவிட பெரிய உச்சநிலை மருத்துவ மையமாக உருவெடுத்திருக்கும். அதைப்போல பாமக சார்பில் மத்திய ரயில்வே துறை அமைச்சர்களும் தமிழகத்துக்குப் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளனர்.
ஆனால், 2009-14 காலங்களில் திமுக மத்திய அமைச்சரவையில் நீடித்த போதிலும் ரயில்வே துறையில் தமிழகம் பின்னடைவைச் சந்தித்தது.
அதிமுக மீது விமர்சனங்களே இல்லையா என்று கேட்டால்,  இல்லை என்று பதிலளிக்க முடியாது. 
ஆனால், கல்வித்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக பாமக முன்வைத்த பல்வேறு யோசனைகளை அதிமுக அரசு ஏற்றுக் கொண்டது. அதேபோல், 7 தமிழர்களை விடுதலை  செய்ய ஆளுநருக்கு பரிந்துரைத்தது. பேரறிவாளனுக்கு பிணை வழங்கியது. கடலூர்- நாகை மாவட்டங்களில் முந்தைய ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்ட பெட்ரோகெமிக்கல் முதலீட்டு மண்டலத்தைக் கொள்கை அளவில் கைவிட்டது.  விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்தது. காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தியது என பாமக சார்பில் முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளையும், யோசனைகளையும் அதிமுக அரசு ஏற்றுக்கொண்டு செயல்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி, தமிழகத்தின் நலன் கருதி மாநில அளவில் செயல்படுத்த வேண்டிய பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கும் அதிமுக அரசு கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளது. மத்தியில் புதிதாக அமைய உள்ள அரசில் தமிழகத்துக்கான திட்டங்களையும், உரிமைகளையும் போராடிப் பெறும் விஷயத்தில் இணைந்து செயல்படவும் அதிமுகவும், பாமகவும் ஒப்புக் கொண்டுள்ளன. 
இந்த ஒருங்கிணைப்பு  தமிழகத்துக்கு பல நன்மைகளைப் பெற்றுத் தரும் என்று பாமக  நம்புகிறது. 
கூட்டணி விஷயத்தில் சிறிய அளவில் சமரசம் செய்து கொண்டாலும்கூட, அதன் மூலம் தமிழகத்துக்கு நன்மை கிடைக்கும் என்பதால் அந்த முடிவு மிகவும் சரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன். 
அதன்படி, 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து செயல்படவும், இந்தக் கூட்டணியில் இணையும் அனைத்துக் கட்சிகளின் வெற்றிக்காக மிகக் கடுமையாக உழைக்கவும் பாமக தீர்மானித்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

கூட்டணிக்காக 10 கோரிக்கைகள்
 மக்களவைத் தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்துக்காக அதிமுக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் 10 கோரிக்கைகளை வைத்துள்ளார்.
அதன் விவரம்:
* காவிரி பாசன மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
* கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் மற்றும் 20 நீர்ப்பாசனத் திட்டங்களை  நிறைவேற்ற வேண்டும்.
*ஜாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.
*பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்.
*தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். *உடனடியாக 500 மதுக்கடைகளை மூட வேண்டும். 
* தமிழகத்தில் படிப்படியாக மணல் குவாரிகளை மூட வேண்டும்.
* அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
* மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான கர்நாடகத்தின் சதியை முறியடிக்க வேண்டும்.
* பொதுத்துறை, கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
* நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் ஆகிய 10 கோரிக்கைகளை அரசுக்கு வைத்துள்ளது. இவற்றை நிறைவேற்றுவதாக அரசு தரப்பிலும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com