ஐ.ஜி. மீதான பாலியல் புகார்: மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகார் தொடர்பான வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு (பிப்ரவரி 20) உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 


தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகார் தொடர்பான வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு (பிப்ரவரி 20) உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 
தமிழக லஞ்சஒழிப்புத்துறை ஐ.ஜி.யான முருகன் மீது அவருடன் பணியாற்றிய பெண் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.இந்த புகார் தொடர்பாக விசாரித்த விசாகா குழு, இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த பரிந்துரை செய்தது. இதனைத் தொடர்ந்து ஐ.ஜி. முருகன் விசாகா குழுவின் பரிந்துரையை எதிர்த்தும், சிபிசிஐடி விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதே போல் புகார் அளித்த பெண் காவல்துறைக் கண்காணிப்பாளர், ஐ.ஜி. முருகனை வேறு பிரிவுக்கு இடமாற்றம் செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஐ.ஜி. முருகன் மீது டிஜிபி ஸ்ரீலக்ஷ்மி பிரசாத் தலைமையிலான விசாகா குழு விசாரணையை முடித்து இரண்டு வார காலத்துக்குள் தனது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண் அதிகாரிகள் மற்றும் பெண் பணியாளர்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களைத் தவிர்க்க அனைத்து துறை உயர் அதிகாரிகளின் அறைகளிலும் சிசிடிவி கண்காணிப்புக் கேமராவைப் பொருத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. 
உயர்நீதிமன்ற தனிநீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐ.ஜி. முருகன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவின் நகல் கிடைப்பதற்கு முன்பாகவே ஐ.ஜி.யின் அலுவலகத்துக்கு வந்த விசாகா குழுவினர் விசாரணையைத் தொடங்கி விட்டதாக குற்றம்சாட்டினார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை வரும் புதன்கிழமைக்கு (பிப். 20) ஒத்திவைத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com