ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தகுதியிழப்பு நடவடிக்கைக்கு உள்ளான முன்னாள் அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி போட்டியிட்டு வென்ற ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தகுதியிழப்பு நடவடிக்கைக்கு உள்ளான முன்னாள் அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி போட்டியிட்டு வென்ற ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவைச் செயலாளர் கி.சீனிவாசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். ஒசூர் தொகுதி காலியானதாக அவர் வெளியிட்ட அறிவிப்பு அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:-
தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி பதவி இழந்தார். இதன் காரணமாக, ஒசூர் தொகுதி கடந்த ஜனவரி 7-ஆம் தேதி முதல் வெற்றிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தமிழக அரசின் அரசிதழலில் செவ்வாய்க்கிழமை (பிப். 19) வெளியிடப்பட்டுள்ளது என்று தனது அறிவிப்பில் சட்டப்பேரவைச் செயலாளர் கி.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
21 தொகுதிகள் காலி: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை நீக்கக் கோரி ஆளுநரிடம் மனு அளித்த 18 எம்.எல்.ஏ.க்கள் ஏற்கெனவே பேரவைத் தலைவர் பி.தனபாலால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால், 18 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ், திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ. மு.கருணாநிதி ஆகியோரின் மறைவு காரணமாக இரண்டு தொகுதிகளும் காலியாகின. இதனால், தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்தது.
ஒசூரைச் சேர்த்து... பாலகிருஷ்ணா ரெட்டியின் தகுதி நீக்கம் காரணமாக, காலியாக உள்ள பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 21-ஆக அதிகரித்துள்ளது. காலியாகவுள்ள 21 தொகுதிகளுக்கும் இப்போது இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
20 தொகுதிகள் எவை எவை? ஆண்டிப்பட்டி, பெரம்பூர், அரவக்குறிச்சி, பாப்பிரெட்டிபட்டி, பெரியகுளம், பூந்தமல்லி, அரூர், பரமக்குடி, மானாமதுரை, சோளிங்கர், திருப்போரூர், ஒட்டப்பிடாரம், தஞ்சாவூர், நிலக்கோட்டை, ஆம்பூர், சாத்தூர், குடியாத்தம், விளாத்திகுளம், திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகியன காலியாகவுள்ள 20 சட்டப் பேரவைத் தொகுதிகள் ஆகும்.
அறிவிப்பு எப்போது? காலியாகவுள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு எதிர்வரும் மக்களவைத் தேர்தலுடன் இணைத்து அறிவிக்கப்படுமா அல்லது மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தனியாக வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 21 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் என்பதால், அது ஒரு மினி சட்டப் பேரவை பொதுத் தேர்தலாக மாறும் வாய்ப்புள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com